அரசு தாவரவியல் பூங்காவில் 7.5 லட்சம் மலர் நாற்றுகள்
ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக நடப்பாண்டு, 7.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.ஊட்டி தாவரவியல் பூங்காவில், மே மாதம், 127 வது மலர் கண்காட்சி நடப்பதை முன்னிட்டு, 'இன்கா மேரிகோல்டு; பிரன்ச்மேரி கோல்டு' உள்ளிட்ட மலர் நாற்றுகள் நடும் பணியை, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மே மாதம், 127 வது மலர் கண்காட்சி நடக்கிறது. பூங்காவில் பல்வேறு பகுதிகளில் மலர் பாத்திகள் அமைத்து, பல வண்ண மலர் செடிகள் நடவு செய்ய, தோட்டக்கலைத் துறை விரிவான ஏற்பாடுகள் செய்துள்ளது.அதன்படி, பூங்காவில் 'இன்கா மேரி கோல்டு மற்றும் பிரன்ச் மேரி கோல்டு' மலர் நாற்றுகள் நடும் பணி துவக்கி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு சிறப்பு அம்சமாக, பார்வையாளர்களை கவரும் வகையில், 'ஜெரேனியம், சைக்லமன், பால்சம் மற்றும் பல்வேறு புதிய ரகமான, ஆர்னமெண்டல்கேல், ஓரியண்டல் லில்லி, ஆசியாடிக் லில்லி, டேலியாக்கள், பிகோனியா, பிரன்ச் மேரிகோல்டு, பேன்சி, பெட்டுனியா மலர்கள் தயாராகி வருகின்றன.மேலும் பிளாக்ஸ் ஜினியா, ஸ்டாக், வெர்பினா, சன் பிளவர், சிலோசியா, ஆண்டி ரைனம், டயான்தஸ், ஆஸ்டர், ஜெர்பரா, கிரை சாந்திமம், டெல்பினியம், சால்வியா, ஆந்துாரியம் போன்ற, 275 வகையான விதைகள் மற்றும் செடிகள் ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெறப்பட்டு, 7.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.மலர் நாற்றுகள் பனியால் பாதிக்காத வகையில், கோத்தகிரி மலர் செடிகள் கொண்டு பாதுகாக்கப்படும். மலர் கண்காட்சியை ஒட்டி, மலர் காட்சி மாடம் மற்றும் கண்ணாடி மாளிகையில், 40 ஆயிரம் வண்ண மலர் செடி தொட்டிகள் அடுக்கி வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.நிகழ்ச்சியில், தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி, டி.ஆர்.ஓ., சதீஷ், உதவி இயக்குனர்கள் பைசல், விஜய லட்சுமி மற்றும் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.