பட்டப்பகலில் கதவை உடைத்து 8 சவரன் கொள்ளை
ஊட்டி: ஊட்டி, பி.எஸ்.என்.எல்., குடியிருப்பில் கதவை உடைத்து, 8 சவரன் நகை திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊட்டி ஏ.டி.சி., அருகே, பி.எஸ்.என்.எல்., குடியிருப்பில், வாசிம் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வாசிமின் பெற்றோர் வாழைத்தோட்டத்தில் வசிக்கின்றனர். வாசிம் செயின்ட் ஜோசப் பள்ளி அருகே வர்க்கி கடை நடத்தி வருகிறார். வாசிம் தனது மனைவியுடன் பெற்றோரை பார்க்க வாழைத்தோட்டத்திற்கு சென்றார். வீட்டு கதவு உடைந்து கிடப்பதாகவும், வீட்டுக்கு வெளியில் மணிபர்ஸ் இருப்பதாகவும் அருகில் வசிப்பவர்கள் வாசிமுக்கு தகவல் அளித்தனர். அதிர்ச்சி அடைந்த வாசிம் தனது மனைவியுடன் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது, வீட்டுக்குள் பொருட்கள் சிதறி கிடந்தன. மனைவியின், 8 சவரன் நகை திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஊட்டி பி1 போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சிவகுமார், எஸ்.ஐ., சுரேஷ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.