மேலும் செய்திகள்
கடும் மேகமூட்டம்; வாகனங்கள் இயக்க சிரமம்
17-Oct-2025
குன்னுார்: குன்னுாரில், மேகமூட்டம், மழை, வெயில், கடுங்குளிர் என மாறுபட்ட கால நிலை நிலவுவதால், உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அவ்வப்போது மழை, மாலை நேரங்களில் வெயில், சாரல் மழை, இரவில் நீர்பனி என மாறுபட்ட காலநிலை நிலவுகிறது. நேற்று காலை முதல், குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதை மற்றும் லேம்ஸ் ராக், டால்பின் நோஸ் காட்சி முனை பகுதிகளில் கடும் மேகமூட்டம் நிலவியது. வாகனங்களில் முகப்பு விளக்குகளை பயன்படுத்தி இயக்கப்பட்டன. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவில் இருப்பதால் மித வேகத்தில் வாகனங்கள் இயக்க போலீசார் அறிவுறுத்துகின்றனர். லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் காட்சி முனை செல்லும் சாலையோர தேயிலை தோட்டங்களில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் செல்பி மற்றும் புகைப்படம் எடுக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனினும், காட்சிமுனை பகுதிகளில், மேகமூட்டம் காரணமாக இயற்கை காட்சிகளை ரசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். குன்னுார் நகர பகுதிகளில் காலை நேரத்தில் கடும் குளிர் நிலவுவதால் உள்ளூர் மக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். உள்ளூர் மக்கள் கூறுகையில்,' குன்னுாரில் இம்மாத துவக்கத்தில் இருந்து, நாள்தோறும் மழை, வெயில், கடுங்குளிர், மேகமூட்டம் என மாறுபட்ட காலநிலை நிலவுவதால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை நேரங்களில் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில் கூட சிரமம் ஏற்படுகிறது. மாலை, இரவில், நீர் பனி தொடர்வதால், இதுவரை இல்லாத அளவுக்கு கடும் குளிர் நிலவுகிறது. மலை பாதையில் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது,' என்றனர்.
17-Oct-2025