நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் மழை வெள்ளம்; ஆபத்தான பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள்
கோத்தகிரி ; கோத்தகிரி உயிலட்டி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் மழை வெள்ளத்தை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.கோத்தகிரி பகுதியில், கோடநாடு காட்சி முனை, கேத்தரின் நீர்வீழ்ச்சி மற்றும் நேரு பூங்காவை அடுத்து உயிலட்டி நீர்வீழ்ச்சி சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.கோத்தகிரி கன்னேரிமுக்கு, ஜான் சல்லிவனின் நினைவு இடத்தை அடுத்து அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியை காண சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.மலை முகடுகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், தற்போது பெய்து வரும் வரும் மழை காரணமாக, வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவது ரம்யமாக உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் இப்பகுதியில் குளிப்பது தொடர்கதையாக உள்ளது. ஆபத்தை உணராமல் இங்கு குளித்தவர்கள், பாசிப்படர்ந்த பாறையில் வழுக்கி விழுந்து பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.கடந்த, 10 ஆண்டுகளில் இதுவரை, 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக, பெய்து வரும் கனமழை காரணமாக, நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை, சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டுக்களித்து செல்கின்றனர். சிலர் ஆபத்தான பகுதிகளுக்கு செல்கின்றனர்.எனவே, போதிய பணியாளர்களை பணியமர்த்தி, சுற்றுலா பயணிகள் ஆபத்தான பகுதிக்கு செல்வதை தடுக்க வேண்டும்.