பொலிவிழந்த ஆவின் பூங்கா: சீரமைத்தால் பயன்
கோத்தகிரி; கோத்தகிரி பாண்டியன் பார்க் பகுதியில் அமைந்துள்ள ஆவின் சிறுவர் பூங்கா, சீரமைக்கப்படாமல் வீணாகி வருகிறது.கோத்தகிரி அருகே, பாண்டியன் பார்க் பகுதியில், ஆவின் நிறுவனம் சார்பில், பால் குளிரூட்டும் நிலையம் செயல்பட்டு வந்தது. விவசாயிகள் மூலம் பெறப்படும் பால், இங்கு குளிரூட்டப்பட்டு ஊட்டி ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.நாளடைவில், பால் வரத்து வெகுவாக குறைந்ததால், கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு, நிலையம் மூடப்பட்டது. இதனால், அங்கு பயன்படுத்திய இயந்திரங்கள் அனைத்தும் துருப்பிடித்து பயன் இல்லாமல் போனது. மேலும், கட்டடமும் சேதமடைந்து காணப்படுகிறது. ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வளாகத்தை மேம்படுத்த ஏதுவாக, நவீன பாலகத்துடன், சிறுவர்கள் விளையாடி மகிழ ஏதுவாக, மாட கோபுரம் சிறு பாலம் போன்ற அம்சங்களுடன், பூங்கா அமைக்க ஆவின் நிர்வாகம் முடிவெடுத்தது.அதன்படி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 28.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முழுக்க ஆவின் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக, சாலையோரத்தில் பாலகம் அமைக்கப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகிறது.பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கையில் கோபுரம், சிறு பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், பணி முழுமை பெறவில்லை. அத்துடன் புல் தரையில் நடைபாதை உள்ளிட்ட, எவ்வித பராமரிப்பு பணியும் மேற்கொள்ளப்படவில்லை. காட்டு செடிகள் ஆக்கிரமித்து, ஓடை தண்ணீர் புல்வெளியின் மேல் ஓடுவதால், சிறுவர் பூங்காவுக்கான எந்த அடையாளமும் இல்லாமல் காட்சியளிக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம் குறிப்பிட்ட பகுதியில் பூங்கா அமைக்கும் பட்சத்தில், ஊட்டிக்கு சென்று வரும் சுற்றுலா பயணிகள் இளைப்பாற முடியும்.குறிப்பாக, சிறுவர்கள் விளையாட ஏதுவாக அமையும். எனவே, மாவட்ட நிர்வாகம் பூங்காவை பொலிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.