கால்வாயில் கழிவுகள் கொட்டினால் நடவடிக்கை: நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
ஊட்டி; 'கோடப்பமந்து பிரதான கால்வாயில் குப்பை கழிவுகள் வீசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. 1.30 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கோடப்பமந்து பிரதான கால்வாய் வழியாக படகு இல்ல ஏரியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்கிறது. 3 கி.மீ., தொலைவில் உள்ள கால்வாயை சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் சீரமைக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, கோடப்பமந்து பிரதான கால்வாய் செல்லும் பகுதியில் குப்பை கழிவுகளை வீசி எறிவதை கண்டறிந்த நகராட்சி நிர்வாகம், ஆங்காங்கே தகரத்தால் தடுப்பு அமைத்துள்ளனர். ஆனால், நகர் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் இருந்து வெளியேறும் குப்பை கழிவுகளை சிலர், இரவு நேரங்களில் கோடப்பமந்து கால்வாயில் வீசி எறிவதாக தெரிய வந்துள்ளது. வீசி எறியும் குப்பை கழிவுகளால் கனமழை சமயத்தில் அடைப்பு ஏற்பட்டு மழை நீர் நகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'இரவு நேரங்களில் குப்பை கழிவுகளை கோடப்பமந்து கால்வாயில் வீசி எறிவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு, அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும்,' என்றனர்.