வருவாய் இழப்பு ஏற்படுத்திய காட்டேஜ்களுக்கு சீல் ஐகோர்ட் உத்தரவின் கீழ் நடவடிக்கை
ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், அனுமதியின்றியும், விதி மீறி காட்டேஜ் போல செயல்பட்டு,அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும், கட்டடங்களுக்கு, 'சீல்' வைக்கும் பணி, ஐகோர்ட் உத்தரவின் படி விரைவு படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் நகராட்சி பகுதிகளில், குடியிருப்புக்கான அனுமதி பெற்ற, வீடுகளை கட்டிய பின், அதனை சுற்றுலா பயணியருக்கான காட்டேஜ்களாக நடத்தும் விதிமீறல்கள் அதிகரித்து வருகின்றன. இது போன்ற காட்டேஜ்களால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வரும் நிலையில், உரிய விதிமுறைகளின் கீழ் ஹோட்டல்கள்; சுற்றுலா விடுதிகளை நடத்தி, அரசுக்கு முறையாக வரி செல்லும் தனியார் ேஹாட்டல் உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இது தொடர்பாக, ஏற்கனவே சுற்றுலா விடுதி, ேஹாட்டல்கள் உரிமையாளர் சங்கத்தின் சார்பில், மாநில முதல்வர், சுற்றுலா துறை இயக்குநருக்கு புகார் அனுப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை ஐகோர்ட் இந்த பிரச்னையில் தலையிட்டு, விதிகளை மீறி செயல்படும் சுற்றுலா விடுதிகள், காட்டேஜ்களை வரன்முறைபடுத்தும் வகையில், பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதை தொடர்ந்து அமைக்கப்பட்ட அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இதுவரை, ஊட்டி, குன்னுார், மஞ்சூர், கூடலுார், பந்தலுார் உட்பட சில பகுதிகளில் பல சுற்றுலா விடுதி, காட்டேஜ்களுக்கு 'சீல்' வைத்துள்ளனர்.