நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ஹோட்டலில் நிதி மோசடி
ஊட்டி; ஊட்டியில் உள்ள நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான ஹோட்டலில் நடந்த, 20 லட்சம் ரூபாய் 'ஆன்லைன்' மோசடி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பிரபல பாலிவுட் நடிகரான மிதுன் சக்கரவர்த்திக்கு, ஊட்டி, பெங்களூரு, புனே, ஜோத்பூர் உட்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளன. மிதுன் சக்கரவர்த்தி பெயரில், ஊட்டியில் உள்ள ஹோட்டல் மேலாளரின் மொபைல் போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், 'குன்னுாரில் ஒரு முக்கியமான விஷயமாக பணியில் உள்ளேன். நான் இருக்கும் இடத்தில் 'நெட்வொர்க்' பிரச்னை உள்ளது. எனவே, ஹோட்டல் வங்கி கணக்கில் உள்ள பணத்தை நான் அனுப்பும் வங்கி எண்ணுக்கு உடனே அனுப்ப வேண்டும்' எனக் கூறப்பட்டு இருந்தது. இதை நம்பிய மேலாளர் ஹோட்டல் வங்கி கணக்கில் இருந்து, 20 லட்ச ரூபாயை அனுப்பி விட்டார். பொங்கல் பண்டிகை நேரத்தில், மிதுன் சக்கரவர்த்தி வேறு ஒரு விஷயமாக, மேலாளரை தொடர்பு கொண்டார்.அப்போது, 'நீங்கள் கூறியபடி, 20 லட்சம் ரூபாயை உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பி விட்டேன்' என, மேலாளர் கூறிய போதுதான் மோசடி நடந்தது தெரிந்தது. ஹோட்டல் மேலாளர், ஊட்டி 'சைபர் கிரைம்' போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.