சூழலை பாதுகாக்க களி மண்ணாலான விநாயகர் சிலைகளை பயன்படுத்த அறிவுரை; 512 இடங்களில் வழிப்பாட்டுக்கு அனுமதி
ஊட்டி; 'சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் களி மண்ணாலான விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும்,'என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா பேசியதாவது: விநாயகர் சதுர்த்தி விழா இம்மாதம், 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின் படி, அனைத்து விதிமுறைகளையும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லும் பாதைகளை மின் வாரியத்தின் அலுவலர்கள் கள ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். போலீசார் வாயிலாக போக்குவரத்து சீர் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரும் வழி தொடர்பாக அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்கூட்டியே தகவல்கள் தெரிவிக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள காரணத்தினால் பிளாஸ்டிக் பூக்கள் போன்ற அலங்காரங்கள் செய்வதை தடுக்க வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் வாயிலாக செய்யப்படும் சிலைகளுக்கு பதிலாக களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள் வைக்கோல் போன்றவை பயன்படுத்தலாம். சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம். இவ்வாறு, அவர் பேசினார். 512 இடங்களில் விநாயகர் சிலைகள் நீலகிரியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி இதுவரை, 512 இடங்களில் விநாயகர் சிலை கள் வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிலை ஊர்வலத்தை ஒட்டி, 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சமவெளி பகுதிகளில் இருந்து பல்வேறு வண்ணங்களில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் லாரிகளில் நீலகிரிக்கு கொண்டுவரப்பட்டு மாவட்டம் முழுவதும் வினியோகிக்கப்பட்டு வருகிறது . விநாயகர் சிலைகளை, குன்னுார் லாஸ் நீர் வீழ்ச்சி, ஊட்டி காமராஜர் அணை, கூடலுார் இரும்பு பாலம் ஆறு, பந்தலுார் பொன்னானி ஆறு கோத்தகிரி உயிலட்டி நீர் வீழ்ச்சி ஆகிய இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின் படி கரைக்க வேண்டும்.