வனத்திற்குள் அத்துமீறி நுழைந்து கற்கள் உடைத்த மேலும் ஒருவர் கைது
ஊட்டி; ஊட்டி அருகே வனத்திற்குள் அத்துமீறி நுழைந்து மண் திருடி, கற்களை உடைத்த மேலும் ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர். நீலகிரி வனகோட்டம், ஊட்டி வடக்கு வனச்சரகம், ஆரம்பி பிரிவு, முத்தநாடு மந்து காவல் பகுதி பிரிவுக்கு உட்பட்ட, வென்லாக் டவுன் காப்புக்காடு வனப் பகுதியில், கடந்த, ஜூலை, 10ம் தேதி மாலை, இருவர் அத்துமீறி நுழைந்து மண் மற்றும் கற்களை உடைத்துள்ளனர். தகவல் அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று, கள ஆய்வு செய்த போது, ஊட்டி வி.சி.,காலனியை சேர்ந்த பிரதீப் குமார், 32 மற்றும் காந்தள் பகுதியை சேர்ந்த அஹ்மதுல்லா,32, ஆகிய இருவரை கைது செய்தனர். இக்குற்றத்தில் ஈடுபட்டு தப்பி ஓடிய, எச்.பி.எப்., பகுதியை சேர்ந்த, நாகராஜ்,30, என்பவரை தேடிவந்த நிலையில், நேற்று காலை வனத்துறையிடம் அவர் பிடிபட்டார். மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவுப்படி கைது செய்து சிறையில் அடைத்தனர்.