பந்தலுார்:அரசின் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு, கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது. அதில், பந்தலுார் அருகே அம்பலமூலா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தினேஷ், பிரதீசன், கிரண், வருண், சரவணபிரபு, விக்னேஸ்வரன், நிரஞ்சன், சுதீஷ், உதயகுமார் ஆகியோர் திருச்சியில் நடந்த மாநில அளவிலான போட்டியில், பங்கேற்று முதல் இடத்தை பிடித்தனர்.மாநில அளவில் முதலிடம் பிடித்த, மாணவர்களுக்கு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சான்றிதழ் மற்றும் பரிசுக்கோப்பை வழங்கினார்.பரிசுகளை பெற்று திரும்பிய மாணவர்களுக்கு, அய்யன்கொல்லி பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு, கேக்வெட்டி பாராட்டு தெரிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் விஜயா பேசுகையில், ''எந்த வசதிகளும் இல்லாத, மாநில எல்லை சோதனை சாவடி அருகே எங்கள் பள்ளி அமைந்துள்ளது. பள்ளியின் மாணவர்கள் யாருடைய பயிற்சியும் இன்றி, தாங்களாகவே முயற்சி மேற்கொண்டு மாநில அளவிலான இசைக்குழு போட்டியில் முதலிடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளனர். அதேபோன்று, அரசு பொது தேர்விலும் முயற்சி மேற்கொண்டு, மாநில அளவில் முதலிடம் பிடிப்பதற்கான பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்,'' என்றார். நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.