| ADDED : மார் 07, 2024 04:54 AM
கூடலுார், : கூடலுார் தாலுகா அலுவலகம் முன்பு, அரசு ஊழியர்கள் இரவு முதல் விடிய, விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கஞ்சி காய்ச்சி உட்கொண்டனர்.கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., அரசு ஊழியர்கள் சங்கத்திற்கு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. இதுவரை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதனை நிறைவேற்ற வலியுறுத்தி வருவாய் துறை ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த, 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை, அலுவலகத்தில் கையெழுத்திட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 27ம் தேதி முதல், அரசு அலுவலகங்கள் முன் போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கையை வலியுறுத்தினர். இதில் தீர்வு கிடைக்காத நிலையில், தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவங்கி உள்ளனர்.இந்நிலையில், கூடலுார் தாலுகா அலுவலகம் முன்பு, வருவாய் துறை ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில் ஊழியர்கள் கஞ்சி காய்ச்சி குடித்தனர். விடிய, விடிய போராட்டம் நடந்தது. நேற்று காலையும் இந்த போராட்டம் தொடர்ந்தது.தொடரும் போராட்டம் காரணமாக, பழங்குடியினர் உள்ளிட்ட பொதுமக்கள், தங்களுக்கு தேவையான சான்றிதழ்கள் மற்றும் அரசு துறை சார்ந்த பணிகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.