குறைந்தது புருக்கோலி வரத்து; கிலோ ரூ.270க்கு விற்பனை
ஊட்டி ; ஊட்டி மார்க்கெட் மண்டிகளில் புருக்கோலி கிலோ, 270 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. ஊட்டி மார்க்கெட்டுக்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. கடந்த சில மாதங்களாக நீலகிரியில் நிலவும் காலநிலை மாற்றத்தால் மலை காய்கறி விவசாயம் குறைந்துள்ளது. வரத்து குறைவால் காய்கறிகளின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. இந்நிலையில், சுற்று வட்டார பகுதிகளில் இருந்து அறுவடை செய்யப்படும் புருக்கோலி, ஊட்டி மார்க்கெட்டுக்கு சராசரியாக, 3 டன் அளவுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.கடந்த சில நாட்களாக புருக்கோலி வரத்து படிப்படியாக குறைந்தது. நேற்று, 500 கிலோ அளவுக்கு விற்பனைக்கு வந்தது. கடந்த இரண்டு நாட்களாக ஊட்டி மார்க்கெட் மண்டிகளில் விற்பனைக்கு வந்த காய்கறி வகைகளில் புருக்கோலி, கிலோ, 250 முதல் 270 ரூபாய் வரைக்கு ஏலம் விடப்பட்டது.பிற மலை காய்கறிகளின் வரத்தும் குறைந்து வருவதால் விலையும் அதிகரித்து வருகிறது. குறைந்தளவில் வந்த புருக்கோலி தரம் பிரிக்கப்பட்டு, கேரளா, பெங்களூரு மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.