உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முதுமலை பகுதியில் பாலம் கட்டிய இடத்தில்... இரும்பு பார்கள் மாயம்! நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் போலீசில் புகார்

முதுமலை பகுதியில் பாலம் கட்டிய இடத்தில்... இரும்பு பார்கள் மாயம்! நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் போலீசில் புகார்

கூடலுார்;முதுமலை, தேசிய நெடுஞ்சாலையில், பழைய பாலங்கள் இடிக்கப்பட்டு அதிலிருந்து அகற்றப்பட்ட, எட்டு இரும்புகள் 'பார்கள்' காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முதுமலை- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், கார்குடி, கல்லல்லா பகுதியில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட, குறுகிய பாலங்கள் சேதமடைந்தன. இதனை மாற்றி அமைக்க, கடந்த ஆண்டு அப்பகுதியில் தற்காலிக பாலங்கள் அமைத்து, பழைய பாலம் இடிக்கப்பட்டது.

ரூ. 3.5 கோடியில் திட்டம்

தொடர்ந்து, 3.85 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. பணிகள் நிறைவடைந்து, ஜூன் மாதம் புதிய பாலத்தில் வாகன போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. பழைய பாலங்களில் இருந்து அகற்றப்பட்ட ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்திய, விலை உயர்ந்த இரும்புகள், கருங்கற்கள் அப்பகுதியில் வைக்கப்பட்டன.அதில், எந்த விதிமுறைகளும் பின்பற்றாமல் கருங்கற்கள் எடுத்து செல்லப்பட்டதாக புகார் உள்ளது. இது தொடர்பாக இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த, ஆங்கிலேயர் காலத்தின் எட்டு பழமையான இரும்பு 'பார்கள்' சில நாட்களுக்கு முன் காணாமல் போயின. தகவல் அறிந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகாரிகள் ஆய்வில் அதிர்ச்சி

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் தர்மராஜ் உட்பட பலர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். கிரேன் கொண்டு துாக்க வேண்டிய இரும்பு பார்கள் எவ்வாறு 'மாயம்' ஆனது என்பது குறித்து ஆய்வு நடந்தது.தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர், மசினகுடி போலீசில் புகார் அளித்தார். அதில், 'முதுமலை பகுதியில் புதிய பாலம் கட்டுவதற்காக பழைய பாலத்திலிருந்து, அகற்றப்பட்ட இரும்பு பார்கள் அப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்தன. தற்போது அவைகள் காணவில்லை; கண்டுபிடித்து தர வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

விசாரணை துவக்கம்

முதுமலை மக்கள் கூறுகையில், 'பழைய பாலம் உடைக்கப்பட்டு அதிலிருந்து, அகற்றப்பட்ட கருங்கற்கள் காணாமல் போனது. அதிகாரிகளும் அதனை கண்டு கொள்ளவில்லை. அப்போது பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. தற்போது, அங்கிருந்து பெரியளவிலான இரும்பு பார்கள் காணாமல் போய் உள்ளது. இதனை கடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். போலீசார் கூறுகையில்,'பழைய பாலம் இடிக்கப்பட்டபோது அகற்றப்பட்ட, இரும்பு பார்களை காணவில்லை. அதனை கண்டுபிடித்து தருமாறு மசினகுடி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்தி வருகிறோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

JeevaKiran
செப் 04, 2024 10:22

எல்லாமே கூட்டு களவாணிகள்தான். புதிய பாலத்தை கட்டியவனை பிடித்து விசாரித்தால் எல்லா உண்மையும் வெளி வரும். முக்கியமாக அங்கு உபயோகப்படுத்திய ஜேசிபி , புல்டோசர் டிரைவர்களை விசாரிக்க வேண்டும்....எல்லாம் சரி. நீலகிரி மாவட்டத்தில் ஜேசிபி / புல்டோசர் போன்ற கனரக இயந்திரங்களுக்கு அனுமதி இல்லையே? பின் எப்படி இவையெல்லாம் தொடர்ந்து நீலகிரியில் மாவட்டத்தில் உலா வருகின்றன? ஒன்றுமே புரியவில்லையே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை