பள்ளி ஆசிரியர்களுக்கு முதலுதவி சிகிச்சைக்கான விழிப்புணர்வு
ஊட்டி; ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரியில், பள்ளி ஆசிரியர்களுக்கு முதலுதவி சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு சார்பில், தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டத்தின் வழிகாட்டுதல்படி மாதந்தோறும் நான்காவது வியாழக்கிழமை ஒவ்வொரு துறை சார்ந்த பணியாளர்கள், ஊழியர்களுக்கு, முதலுதவி சிகிச்சை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, குந்தா, கூடலுார் மற்றும் பந்தலுார் வட்டங்களில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளை சேர்ந்த, 30 ஆசிரியர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது தொடர்பான பயிற்சி முகாம் நடந்தது. மருத்துவ கல்லுாரி முதல்வர் கீதாஞ்சலி தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். பயிற்சியில் சுய நினைவின்றி இருப்பவர்களுக்கு சி.பி.ஆர்., எனப்படும் செயற்கை மூச்சு மற்றும் நெஞ்சு பகுதியில் அழுத்தம் கொடுத்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவது தொடர்பாக செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பல்வேறு முதலுதவி சிகிச்சைகள் அதில், 'எதிர்பாராமல் நிகழும் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை எவ்வாறு மிகுந்த பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது; தலையில் காயமடைந்தவர்கள், முதுகு தண்டுவடத்தில் காயமடைந்தவர்கள்; ரத்த போக்கு மேலாண்மை, விபத்து அல்லது வேறு காரணங்களால் காயமடைந்தவர்கள் உடலில் இருந்து ரத்தம் வெளியேறுவதை கட்டுபடுத்துவது; விபத்தில் துண்டிக்கப்பட்ட பகுதி பராமரிப்பு, மாரடைப்பு, பக்கவாதம், வலிப்பு, பாம்பு கடி மற்றும் விஷ பூச்சிகள் கடி முதலுதவி, 108 ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பது,' குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது. தீயணைப்புத்துறை சார்பில், நோயாளிகளுக்கு பேரிடர் மீட்பு குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.