குன்னுார் அருகே வீடுகளின் கதவை உடைக்கும் கரடி: இருள் சூழ்ந்த இடத்தில் மக்கள் அச்சம்
குன்னுார்: குன்னுார் 'நான்சச்' பகுதியில் இரவில் வீடுகளின் கதவுகளை உடைக்கும் கரடியால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.குன்னுார் 'நான்சச்' பகுதியில் குட்டிகளுடன் 3 கரடிகள் உலா வந்தன. கடந்த வாரத்தில் ஆண் கரடி மின்கம்பத்தின் மீது ஏறிய போது, ஷாக் அடித்து உயிரிழந்தது.இந்நிலையில், நேற்று நான்சச் பகுதியில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மற்றும் அருகில் உள்ள மூன்று குடியிருப்புகளின் கதவுகளை மற்றொரு கரடி உடைக்க முயற்சி செய்தது. சப்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் பார்த்தபோது, கரடி அங்கிருந்து சென்றது. தொடர்ந்து, அருகில் உள்ள வட மாநில தொழிலாளர்களின், 5 குடியிருப்பு கதவுகளை உடைத்தது.மக்கள் கூறுகையில், 'இந்த பகுதியில் உள்ள சில தெரு விளக்குகள் எரியாததால், குடியிருப்பு பகுதிக்கு கரடி இரவில் வருவது தெரிவதில்லை. இதே போல, சுற்றுப்புற குடியிருப்பு பகுதிகளில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், மிகுந்த அச்சத்துடன் சென்று வருகிறோம்.எனவே, இந்த பகுதிகளில் கூடுதல் தெருவிளக்குகள் அமைப்பதுடன், கரடியை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும்,'' என்றனர்.