உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலை மாவட்ட தேயிலை தோட்டங்களில் கொப்புள நோய் அபாயம்! மகசூல் பாதிப்பால் சிறு விவசாயிகள் கவலை

மலை மாவட்ட தேயிலை தோட்டங்களில் கொப்புள நோய் அபாயம்! மகசூல் பாதிப்பால் சிறு விவசாயிகள் கவலை

ஊட்டி: நீலகிரியில் மேகமூட்டமான காலநிலையால் தேயிலை தோட்டங்களை கொப்புள நோய் தாக்கியுள்ளது. நீலகிரியில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பாண்டில் கோடை மழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. தென்மேற்கு பருவமழை சராசரி அளவை எட்டியது. வடகிழக்கு பருவமழை தாமதமாக துவங்கினாலும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 'பெஞ்சல்' புயலின் எதிரொலியாக, நீலகிரியில் கடந்த சில நாட்களாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

கடும் மேகமூட்டம்

இந்த மழையால், தேயிலை தோட்டங்களில் நல்ல ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது. தேயிலை மகசூல் அதிகரிக்க விவசாயிகள் தோட்டங்களில் உரமிட்டு வருகின்றனர். விரைவில் கடும் பனிப்பொழிவு துவங்க இருப்பதால் அதற்கு ஏற்றார் போல் தோட்டங்களை பராமரித்து வருகின்றனர். டிச ., மாதம் துவக்கத்தில் இருந்து, காலை முதலே மாவட்டம் முழுவதும் கடும் மேகமூட்டம் தென்பட்டது. வெயில் தென்படாமல் தொடர்ந்து ஈரப்பதம் அதிகரித்து வருவதால், தேயிலை தோட்டங்களில், 'கொப்புள நோய்' பரவல் அதிகரித்துள்ளது. வெயில் தென்பட்டால் மட்டுமே பசுந்தேயிலை அரும்புகள் துளிர் விட்டு மகசூல் அதிகரிக்கும். ஆனால், பகல் நேரங்களில் சாரல் மழைக்கு இடையே மேகமூட்டம் சூழ்ந்து விடுவதால் தேயிலை தோட்டங்களை படிப்படியாக கொப்புள நோய் தாக்கி வருகிறது. மாவட்டத்தில் மஞ்சூர், குன்னுார், கோத்தகிரி, கூடலுார், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில், தற்போது வரை, 500 ஏக்கர் அளவுக்கு தேயிலை தோட்டங்களை கொப்புள நோய் தாக்கியுள்ளது. தேயிலை மகசூல் குறையும் அபாயத்தால சிறு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கொப்புள நோய் பாதித்த செடிகளை பாதுகாப்பது குறித்து தோட்டக்கலை அதிகாரிகள் கூறுகையில்,'தேயிலை செடிகளில், கொப்புள நோய் பாதிப்பது தெரியவந்தால், பாதிக்கப்பட்ட இலைகள் அகற்றிவிட்டு, 'எக்ஸோ கன்சோல்- 200 மி மற்றும் 'காப்பர் ஆக்ஸிகுளோரைடு-210 கிராம்' ஆகியவற்றின் கலவையை, 7 நாட்கள் இடைவெளி விட்டு தெளிப்பான் மூலம் தேயிலை செடிகளுக்கு தெளிக்க வேண்டும். இதே போல, 'பிராப்பிகானாசோல்- 125 மி; ஆக்ஸிகுளோரைடு- 210 கிராம்' கலவையை தெளிப்பான் மூலம் தெளித்தால் நோயை கட்டுப்படுத்த முடியும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி