உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசின் விதிகளை மீறி பாறைகள் உடைப்பு; உள்ளூர் மக்களின் புகாரை அடுத்து பணிகள் நிறுத்தம்

அரசின் விதிகளை மீறி பாறைகள் உடைப்பு; உள்ளூர் மக்களின் புகாரை அடுத்து பணிகள் நிறுத்தம்

கோத்தகிரி; கோத்தகிரி டானிங்டன் பகுதியில், பொக்லைன் பயன்படுத்தி, பாறைகளை உடைத்து, விவசாய நிலத்தை சமன் செய்யும் பணிகளை நிறுத்த உத்தரவிடப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில், பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்களை பயன்படுத்தி, பாறைகளை உடைத்து, விவசாய நிலங்களை குடைந்து சமன் செய்ய தடை உத்தரவு உள்ளது. மீறுபவர்கள் மீது, சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், கோத்தகிரி டானிங்டன் பகுதியில், முறையான அனுமதி பெறாமல், தேயிலை தோட்டத்தை அழித்து, செங்குத்தான மலையை குடைந்து, சாலை ஏற்படுத்தி கனரக இயந்திரங்களை பயன்படுத்தி, கடந்த சில நாட்களாக, பகல் மற்றும் இரவு நேரங்களில், பாறைகள் உடைக்கப்பட்டு வருகிறது. இது குறித்த உள்ளூர் பொது மக்கள் அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். இதன்படி, வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, அனுமதி இல்லாமல் பாறைகள் உடைப்பதை தடுத்து நிறுத்தினர். இருப்பினும், பணிகள் நடந்ததை அடுத்து, இரண்டு நாட்களுக்கு முன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'விவசாய நிலங்களில் அனுமதி இல்லாமல் நடக்கும் பணிகளை தடுக்க, வருவாய்த்துறை, கனிமவளத்துறை மற்றும் காவல்துறை ஆகியவற்றில், எந்த துறை நடவடிக்கை எடுப்பது என்பதில் குழப்பம் உள்ளது. சில விவசாய பணிகளுக்கு அனுமதியின் பேரில், 'குப்பட்டா' இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி, கட்டுமானத்திற்காக பணிகள் நடக்கின்றன. மண் சரிவு உள்ளிட்ட, பேரிடர் நிகழாமல் இருக்க, மாவட்ட நிர்வாகம், உரிய சட்டதிட்டங்களை கொண்டு வர வேண்டும்,' என்றனர்.தாசில்தார் ராஜலட்சுமி கூறுகையில், ''கோத்தகிரியில் மீண்டும் பாறைகளை உடைக்கும் பணி நடப்பதாக வந்த தகவலை அடுத்து, குறிப்பிட்ட இடத்தை ஆய்வு செய்து, பணியை நிறுத்தி உள்ளோம். இது தொடர்பாக பிரேமா என்பவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளோம். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை