மாதிரி ஐ.நா., சபை நிகழ்ச்சியால் தலைமைத்துவத்திற்கு பயன் மாணவர்களுக்கு பிரிகேடியர் பாராட்டு
குன்னுார்: குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளியில் மாதிரி ஐக்கிய நாடு சபை மாநாடு நடந்தது. அதில், 'ஆயுத குறைப்பு மற்றும் அணு ஆயுத பரவல் தடுப்பு' என்ற கருப்பொருளில் நடந்த இந்த மாநாட்டில், ராஜதந்திரம், பொது பேச்சு, விமர்சன சிந்தனை திறன்களை, மாணவர்கள் வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பள்ளி தலைவர் பிரிகேடியர் ப்ருஷ்டி பேசுகையில், ''பள்ளி மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்கொண்டு வர இது வாய்ப்பாக அமைந்துள்ளது. வருங்காலத்தில் பயமின்றி, தைரியத்துடன் தலைமைத்துவ பணிகளில் சேர்ந்து சிறந்து விளங்க வேண்டும். இதற்கு இது போன்ற மாநாடு பயனாக அமைகிறது. அந்தந்த நாடுகள் குறித்த அறிவு சார்ந்த பண்புகள் மாணவர்களுக்கு கிடைப்பதுடன் எந்த நாட்டிற்கு என்ன தேவை என்பதை அறிய வாய்ப்பாக அமைந்துள்ளது,'' என்றார். மைய அலுவலர் கர்னல் சங்கீதா சர்தானா பேசுகையில், ''மாணவர்களின் சர்வதேச விவகாரங்கள் குறித்த புரிதல், மேம்படுத்துதல் மட்டுமில்லாமல் மாணவர்களின் தலைமைத்துவ மற்றும் கூட்டுறவு திறன்களை வலுப்படுத்த உதவியுள்ளது,''என்றார். நேர்மறையான கருத்துக்களுடன் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை மாநாடு நிறைவு பெற்றது. தொடர்ந்து, 'ஜப்பான் நாட்டின் மாதிரி துாதரக பங்கேற்ற மாணவி பவ்யா கோக்லி, ரஷ்யா நாட்டின் மாதிரி துாதரக பங்கேற்ற மாணவர் கியாரா கோயல்,' ஆகியோருக்கு சிறந்த பேச்சாளர்களுக்கான விருது வழங்கப்பட்டது. அணு ஆயுத குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சாராம்சங்களை முன்வைத்த, இந்தியா மற்றும் நட்பு நாடுகளை சேர்ந்த மாணவ குழுவினருக்கு சிறந்த தீர்மானத்திற்கான விருது வழங்கப்பட்டது. மற்ற நாடு துாதர்களாக பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை, பள்ளி முதல்வர் ஹேமாபிராங்க், சமூக அறிவியல் துறை தலைவர் சத்யன், கலாசார ஒருங்கிணைப்பாளர் மேரி ஆன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.