பி.எஸ்.என்.எல்., மொபைல் சேவை கடும் பாதிப்பு; வாடிக்கையாளர்கள் அதிருப்தி
குன்னுார்; குன்னுார், ஊட்டி பகுதிகளில் பி.எஸ்.என்.எல்., சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் குன்னுாரை தலைமையாக கொண்டு பி.எஸ்.என்.எல்., தொலை தொடர்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தனியார் இணைப்புகளை விட பி.எஸ்.என்.எல்., மொபைல் வாடிக்கையாளர்கள் அதிகம் உள்ளனர்.இந்நிலையில், மற்ற மாவட்டங்களில், பல ஆண்டுகளாக, 4ஜி சேவை கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் தற்போது, 4ஜி சேவை வழங்கியபோதும், அவற்றின் இணைப்பு வேகம், மிகவும் குறைவாக செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் 4ஜி சேவைக்காக பணம் செலுத்திய போதும் பயன் இல்லாமல் தனியார் சேவைகளை நாடி செல்கின்றனர். இதே போல, வாய்ஸ் சேவையும் மிகவும் மோசமாக உள்ளது. வாடிக்கையாளர்கள், பேசும்போது பல முறை துண்டிப்பு ஏற்படுவதுடன், சிக்னல் வாய்ஸ் பிரேக் ஆவது தொடர்கிறது. கோத்தகிரியில் உள்ள சில இளைஞர்கள், பி.எஸ்.என்.எல்., சிம் கார்டுகளை,ஒப்படைக்க வந்த போது அதிகாரிகள் சமாதானம் செய்த அனுப்பி வைத்தனர்.மத்திய அரசின் பி.எஸ்.என்.எல்., கட்டணம் மற்ற தனியார் அமைப்புகளின் கட்டணங்களை விட குறைவாக இருந்தபோதும், நெட்வொர்க் பிரச்னைகள் நீடிப்பதால், நாளுக்கு நாள் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் தனியார் மொபைல் சேவைகளுக்கு மாறி வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.