குன்னுார் நகராட்சி இடத்தில் கட்டப்பட்ட கட்டடத்திற்கு சீல்
குன்னுார்: குன்னுார் மாடல் ஹவுஸ் பகுதியில் நகராட்சி இடத்தில் கட்டப்பட்ட மாடி கட்டடத்திற்கு நகராட்சி சார்பில் 'சீல்' வைக்கப்பட்டது. குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றியும், விதிகள் மீறியும் ஏராளமான கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேட்டுப்பாளையம் சாலை, டி.டி.கே., சாலை, ரேலி காம்பவுண்ட் உட்பட பல இடங்களிலும் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதேபோல, ஆற்றோர பகுதிகளும் ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இந்நிலையில், மாடல் ஹவுஸ் பகுதியில், சேவியர் என்பவர் நகராட்சி இடத்தில் உள்ள கட்டடத்தின் மேற்பகுதியில் கூடுதலாக கட்டி வந்துள்ளார். கமிஷனர் உத்தரவின் பேரில், நேற்று நகராட்சி நகர திட்ட அலுவலர் ஜானகிராம் மேற்பார்வையில், நகராட்சி ஊழியர்கள் 'சீல்' வைத்தனர்.