கன்டோன்மென்ட் வாக்காளர் பட்டியலில் குளறுபடி! ஆண்டுதோறும் புகார் அளித்தும் பயனில்லை
குன்னுார்: ‘குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாக்காளர் பட்டியலில் கடந்த, 2008-ம் ஆண்டு முதல் சுட்டிக்காட்டப்பட்டு வரும் குறைகள் இன்னும் நிவர்த்தி செய்யப்படவில்லை,’ என்ற, புகார் எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னுார் சட்டசபை தொகுதியின் பாகம் எண், 139-க்கான 2027ம் ஆண்டிம் சிறப்பு சுருக்கமுறை திருத்த அடிப்படையின் கீழ் நடந்த வாக்காளர் பட்டியல் நவ. 12ல் வெளியிடப்பட்டது. வரும், 2027 ஜன., 1ம் தேதி தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு, அனைத்து துணை பட்டியல்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலின்படி, வெலிங்டன் கண்டோன்மென்ட் வார்டு எண்–1 மற்றும் 2-க்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம், 1,093 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில், 518 ஆண் வாக்காளர்களும், 575 பெண் வாக்காளர்களும் உள்ளனர்; மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளது. இந்த பாகத்தின் கீழ் வார்டு எண்–1-ல் உள்ள ரயில்வே லைன், போலீஸ் குடியிருப்பு, கண்டோன்மென்ட் குடியிருப்பு, எம்.பி., தெரு, மசூதி தெரு ஆகிய பகுதிகளும்; வார்டு எண்–2-ல் உள்ள ஜீனத் பில்டிங், முகமதியர் லைன், குஞ்சுகுட்டி லைன், டாக்டர் அம்பேத்கர் நகர், கன்டோன்மென்ட் மருத்துவ குடியிருப்பு, அண்ணா நகர் ஆகிய பகுதிகளும் வருகின்றன. இப்பகுதி வாக்காளர்களுக்கான பொது ஓட்டுச்சாவடியாக வெலிங்டன் பஜாரில் உள்ள செயின்ட் ஜோசப் நடுநிலைப் பள்ளி (எண்: 139) அறிவிக்கப்பட்டுள்ளது. துணை ஓட்டுச்சாவடிகள் எதுவும் இல்லை எனப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில், 2008-ம் ஆண்டு முதல் தொடரும் குளறுபடிகள் தற்போதும் தொடர்வதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலம் தர்மசீலன் கூறுகையில், ‘‘2027 ஜன., முதல் தேதியை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில், கடந்த, 2008-ம் ஆண்டு முதல் சுட்டிக்காட்டப்பட்டு வரும் குறைகள் இன்னும் சரிசெய்யப்படவில்லை. வீடுகளின் வரிசைப்படி பட்டியல் தயாரிக்கப்படவில்லை. ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்களின் பெயர்கள் வெவ்வேறு தொடர் எண்களில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக பாகம், 139 கொண்ட பட்டியலில் அதே நிலை தொடர்கிறது. எனவே, தேர்தல் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு இந்த வாக்காளர் பட்டியலை சரிசெய்து மறுவெளியீடு செய்ய வேண்டும். இது தொடர்பாக கலெக்டருக்கும் மனு அளிக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.