கோத்தகிரி கட்டபெட்டு பஜாரில் துாய்மை பணி
கோத்தகிரி : கோத்தகிரி கட்டபெட்டு பஜாரில் துாய்மை பணி தீவிரமாக நடந்து வருகிறது. கட்டபெட்டு பஜார் பகுதி நடுஹட்டி, கக்குச்சி மற்றும் ஜெகதளா ஊராட்சிகளின் எல்லையாக அமைந்துள்ளது. இங்கு, வங்கிகள், தனியார் கிளினிக்குகள், கடைகள் மற்றும் குடியிருப்புகள் நிறைந்துள்ளன. கோத்தகிரி - ஊட்டி வழித்தடத்தில் அரசு பஸ்கள் உட்பட தனியார் வாகனங்கள் பஜாரை கடந்துதான் செல்ல வேண்டும். இதனால், மக்கள் நடமாட்டம் நிறைந்து காணப்படுகிறது.குடியிருப்புகளில் இருந்து அன்றாடம் வெளியேறும் குப்பை கழிவுகள், சாலையோரத்தில் குப்பை தொட்டியில் கொட்டப்படுகிறது. குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படாத நிலையில், தேக்கம் அடைந்து, துர்நாற்றம் வீசி வந்தது. இவ்வழியாக அரசு அதிகாரிகள் சென்றுவரும் நிலையில், குப்பைகள் தேங்காத வண்ணம், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் துாய்மை பணி நடந்து வருகிறது.