தோட்டங்களில் கொத்து, கொத்தாக காபி பழங்கள்; அறுவடை பணியில் சிறு விவசாயிகள்
ஊட்டி; தேயிலை தோட்டங்களில் ஊடு பயிராக சாகுபடி செய்யப்பட்ட காபி பழ விளைச்சல் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் விளங்குகிறது. குறிப்பாக, குந்தா, கூடலுார், பந்தலுார், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக காபி சாகுபடி செய்துள்ளனர். இந்த காபி செடிகளில் ஆண்டிற்கு இரண்டு முறை காபி அறுவடை செய்யலாம். இந்நிலையில், தற்போது அறுவடை காலமாக இருப்பதால் இந்த முறை காபி செடிகளில் விளைச்சல் அதிகமாக உள்ளது. சிவப்பு நிறங்களில் காபி பழங்கள் செடிகளில் கொத்து, கொத்தாக பழுத்து தொங்குகின்றன. காபி பழங்களை ஆண்டுக்கு இரண்டு முறை அறுவடை செய்யலாம். அறுவடை சீசனில், 20 நாட்களுக்கு ஒரு முறை செடியில் காய்த்துள்ள பழங்களை அறுவடை செய்ய வேண்டும். ஒரு செடியில் 8 கிலோ
நல்ல விளைச்சல் இருந்தால் ஒரு செடியில் அதிகபட்சமாக, 8 கிலோ காபி பழங்கள் கிடைக்கும். ஒரு கிலோ காபி பழங்கள் அதிகபட்சம், 150 முதல் 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த பழங்களை வாங்கி செல்லும் வியாபாரிகள் அதன் தோலை நீக்கி உலர வைக்கின்றனர்.பின், காபி கொட்டைகளாக மாற்றி வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்கின்றனர். அறுவடைக்கு தயாரான காபி பழங்களை அறுவடை செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. சிறு விவசாயிகள் உற்பத்தி செய்து வீடுகளில் வைத்துள்ள காபி கொட்டைகளை வாங்க வியாபாரிகள் கிராமங்கள் தோறும் சென்று கொள்முதல் செய்து வருகின்றனர்.