குன்னுார் பஸ் ஸ்டாண்டில் உடனடியாக கழிப்பிடம் அமைக்க கலெக்டர் உத்தரவு
குன்னுார்: 'குன்னுார் பஸ் ஸ்டாண்டில் இலவச கழிப்பிட வசதியை உடனடியாக, ஏற்படுத்த வேண்டும்,' என, நகராட்சி அதிகாரிகளுக்கு, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.குன்னுாரில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நகராட்சி பஸ் ஸ்டாண்ட் பொலிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. 'பஸ் ஸ்டாண்டிற்குள், ஏற்கனவே சீல் வைத்த கடைகள் மற்றும் விடுதி அறைகளில், டைல்ஸ் பதித்தல், முன்புறம் சிறிய கூரை அமைத்தல், வர்ணம் பூசும் பணி, தடுப்பு சுவர்,' என, பல வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்ட இடத்தில், நகராட்சி நிதியில், தனியாக இருக்கை வசதியுடன் தடுப்பு அமைக்கப்பட்டது. இந்த பணிகளை, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா ஆய்வு மேற்கொண்டார். இப்பகுதியில், இலவச கழிப்பிட வசதி இல்லாமல் உள்ள, ஒரே பஸ் ஸ்டாண்டான இங்கு, உடனடியாக இலவச கழிப்பிட வசதியை ஏற்படுத்த, நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, 'எடப்பள்ளியில், 5 லட்சம் ரூபாயில், ராஷ்ட்ரிய கிராம ஸ்வராஜ் அபியான் திட்டத்தின் துணை வட்டார வளர்ச்சி அலுவலகம், 10 லட்சம் ரூபாயில் அணியாடாவில் சமையல் கூடம், 11 லட்சம் ரூபாயில், காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் தடுப்பணை, 3.50 லட்சம் ரூபாயில் கனவு இல்ல கட்டுமானம்,' என, 1.48 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை ஆய்வு மேற்கொண்டார். குன்னுார் தாசில்தார் ஜவஹர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெய்சங்கர், விஜயா, நகராட்சி பொறியாளர் வேலுச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.