கிராமத்திற்கு சீராக பஸ் இயக்க கலெக்டர் அலுவலகம் முற்றுகை
ஊட்டி; முட்டிநாடு கிராமத்திற்கு சீராக பஸ் இயக்க கோரி கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி அருகே முட்டிநாடு கிராமத்தை சுற்றி சிவசெந்துார் நகர், செல்விப் நகர், ஈஸ்வர நகர் என, 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிகளிலிருந்து ஊட்டி, குன்னுாருக்கு அரசு, தனியார் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரிக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். ஊட்டியிலிருந்து முட்டிநாடு கிராமத்திற்கு கடந்த, 50 ஆண்டுக்கு மேலாக அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. காலை, 6:00 மணி, 8:00 மணி, 10:00 மணி, 11:00 மணி மற்றும் மதியம், 1:30 மணி, 3:30 மணி, 5:30 மணி இரவு, 7:30 மணிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்ததில் கிராம மக்கள் பயனடைந்து வந்தனர். குன்னுாரிலிருந்து காலை இரண்டு முறை, மதியம் மற்றும் இரவு மூன்று முறை இயக்கப்பட்டு வந்ததும் மக்களுக்கு பயனாக இருந்தது. தற்போது இச்சேவைகள் மாற்றப்பட்டு ஊட்டிக்கு காலை இரண்டு முறை, மதியம், மாலை மூன்று முறை மட்டும் இயக்கப்படுகிறது. குன்னுாருக்கு மூன்று முறை மட்டும் இயக்கப்படுகிறது. ஊர் தலைவர் பிரபுராஜ் நிருபர்களிடம் கூறுகையில்,''காலை 8:30 மணி, மாலை, 5:00 மணிக்கு இயக்கப்பட்டு வந்த பஸ்சை போக்குவரத்து கழக நிர்வாகம் திடீரென ரத்து செய்ததால் இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நடந்து சென்றாலும் வன விலங்கு தொல்லையால் மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. போக்குவரத்து கழக நிர்வாகத்திற்கு பல முறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் வழித்தடத்திற்கு சீராக பஸ் இயக்க கோரி கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்து கலெக்டரை சந்தித்து மனு அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார், '' என்றார்.