கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட வாக்காளர் திருத்த பட்டியலில் குழப்பம்! ஒரே குடும்பத்தினர் வெவ்வேறு ஓட்டு சாவடிக்கு செல்லணும்
குன்னுார்; நீலகிரி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் திருத்த பட்டியலில், குன்னுார் உட்பட சில இடங்களில், ஒரே குடும்பத்தினர் வெவ்வேறு ஓட்டு சாவடிக்கு சென்று ஓட்டளிக்குள் வகையில், பெயர் மாறி உள்ளதால் பதிவாகும் ஓட்டு சதவீதம் குறையும் அபாயம் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில், நடப்பாண்டு ஜன., 6ல் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் திருத்த பட்டியலின்படி, '2 லட்சத்து 79 ஆயிரத்து 201 ஆண் வாக்காளர்கள்; 3 லட்சத்து 5 ஆயிரத்து 41 பெண் வாக்காளர்கள், 18 பேர் மூன்றாம் இனத்தவர்,' என, மொத்தம், 5 லட்சத்து 84 ஆயிரத்து 260 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஊட்டி தொகுதியில், '94,581 ஆண் வாக்காளர்கள், 1,03 ,813 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 11 பேர்,' என, மொத்தம் 1,98,405 வாக்காளர்கள் உள்ளனர்; கூடலுார் (தனி) தொகுதியில், 94,582 ஆண் வாக்காளர்கள், 1,00,727 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர்,' என, மொத்தம் 1,95,312 வாக்காளர்கள் உள்ளனர். குன்னுார் தொகுதியில், '90,038 ஆண் வாக்காளர்கள், 1,00,501 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 4 பேர்,' என, மொத்தம் 1,90,543 வாக்காளர்கள் உள்ளனர். வரும், 2026ல் சட்டசபை தேர்தலுக்கு கட்சிகள், தற்போது தயாராகி வரும் நிலையில், வாக்காளர் பட்டியலில் உள்ள பிரச்னைகள் சீர் செய்யப்படாமல் உள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனு அதில், குன்னுார் சட்டசபை தொகுதியில், வாக்காளர் பட்டியல் சீராக இல்லாதது குறித்து, கடந்த மார்ச் மாதம், தேர்தல் ஆணைய பிரிவுக்கு வெலிங்டனை சேர்ந்த தர்மசீலன் புகார் மனு அனுப்பியிருந்தார். அதில், பல வீடுகளில் வரிசைப்படி பட்டியல் இல்லை; இதனால், ஓட்டளிக்கும் போது குழப்பம் ஏற்படுகிறது. பட்டியலை வைத்து குறிப்பிட்ட ஏரியாவில் ஒப்பிட்டுப் பார்க்கவும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே வீட்டு கதவு எண்ணில் இருக்குமாறு சீர் செய்து, 100 சதவீத பட்டியலை தெளிவாக வெளியிட வேண்டும்,' என, கூறி இருந்தார். இதற்கு பதில் வராத நிலையில், தகவல் அறியும் சட்டத்தின் கீழ், அவர் பல கேள்விகளை கேட்ட போது, 'தேர்தல் ஆணையத்தின் www.eci.in.nic.inஎன்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்,' என, மட்டுமே பதில் வந்தது. தர்மசீலன் கூறுகையில்,'' பொதுவாக, வாக்காளர் பட்டியலில், 'பாகம், பிரிவு, வரிசை' எண் என மூன்றாக பிரித்து பட்டியலில் பெயர்கள் இடம் பெறுகின்றன. அதில், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், வெவ்வேறு பாகம், பிரிவுகளில் மாற்றப்பட்டுள்ளனர். இதனால், ஒரே குடும்பத்தினர் வெவ்வேறு இடங்களில் உள்ள ஓட்டு சாவடிக்கு சென்று ஓட்டளிப்பதை தவிர்த்து விடுகின்றனர். இதனால், பதிவாகும் ஓட்டு சதவீதம் குறைகிறது. மேலும், இறந்து போனவர்களின் பெயர்கள் முந்தின பட்டியலில் நீக்கப்பட்டு இருந்த போதும், தற்போதைய பட்டியலும் மீண்டும் இடம் பெறுகிறது. இதுபோன்ற எண்ணற்ற குளறுபடிகள் தீர்வு காண கோரி, கடந்த, 16 ஆண்டு காலமாக போராடியும் தீர்வு கிடைக்கவில்லை. இது தொடர்பாக பொது நல வழக்கு தொடர நுகர்வோர் அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. எளிமையான பதிவு, சுலபமான திருத்தம் இருந்தும் அதற்கான தீர்வு கிடைப்பதில்லை. இதற்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காணவேண்டும்,''என்றார். வாரிய முன்னாள் துணை தலைவர் வினோத்குமார் கூறுகையில், '' குன்னுாரில் வாக்காளர்களின் பெயர்கள் இடம் மாறி உள்ளது. பலரும், 3 கி.மீ., துாரம் சென்று வாக்களிக்க வேண்டியுள்ளது. வாக்காளர்களை வாகனங்களில் அழைத்து செல்ல தடை உள்ளதால், மாற்றுதிறனாளிகள், கர்ப்பிணிகளை அழைத்து செல்ல முடியாமல் வாக்கு சதவீதம் குறைகிறது. இதனை தவிர்க்க, ஒரு கி.மீ., துாரத்திற்குள் ஓட்டு சாவடிகள் அமைக்க வேண்டும். ஒரு ஓட்டும், வெற்றியை நிர்ணயிக்கும் என்பதால், சிறந்த ஜனநாயகத்தை உருவாக்கும் வகையில், ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள ஓட்டுச்சாவடியை இரண்டாக பிரிக்க வேண்டும். அந்தந்த பகுதி வாரியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்வது அவசியம்,'' என்றார். வருவாய் துறையின் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,'தேர்தலுக்கு முன்பு, நடக்கும், 5 முகாம்களில் பொதுமக்கள் நேரடியாக வந்து பதிவு செய்து, மாற்றமும் செய்து கொள்ளலாம்,' என்றனர்.