உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோத்தகிரி ரைப்பில் ரேஞ்ச் சதுப்பு நிலத்தில் குவியும் கட்டட கழிவுகள்! 130 ஏக்கர் நீராதார பகுதி பாதிக்கும் அபாயம்

கோத்தகிரி ரைப்பில் ரேஞ்ச் சதுப்பு நிலத்தில் குவியும் கட்டட கழிவுகள்! 130 ஏக்கர் நீராதார பகுதி பாதிக்கும் அபாயம்

கோத்தகிரி; 'கோத்தகிரி ரைபிள் ரேஞ்ச் சதுப்பு நிலத்தில், கட்டட கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு வருவதை தடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. கோத்தகிரி நகரின் மையப்பகுதியில், 7 ஏக்கர் பரப்பளவில் ரைபிள் ரேஞ்ச் சதுப்பு நிலம், நகர மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இதனை சுற்றி, 130 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீராதார பகுதிகள் உள்ளன. இந்த சதுப்பு நிலம், நீண்ட காலமாக, பல்வேறு வகையில் சீரழிவுகளை சந்தித்து வருகிறது. ராம்சந்த் பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுகள், சதுப்பு நிலத்தில் சங்கமிக்கிறது. கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன், ஒரு தனியார் மது ஆலைக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்ட இந்த சதுப்பு நிலத்தின் ஒரு பகுதி, 30 ஆண்டுகால சட்ட போராட்டத்திற்கு பின், மாவட்ட நிர்வாகத்தால் மீட்கப்பட்டது. அரசு ஆவணத்தில் மைதானம் என்று பதியப்பட்டுள்ள இந்த பகுதியை, சதுப்பு நிலமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த தனியார் நிறுவனத்தால் நடப்பட்ட கற்பூர மரங்களால், சதுப்பு நிலத்தில் உள்ள தண்ணீர் குறைந்து, வறண்டு போகும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. 'இங்குள்ள கற்பூர மரங்களையும், அங்கு கட்டப்பட்டுள்ள கட்டடத்தையும், அகற்ற வேண்டும்,' என, மாவட்ட நிர்வாகத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. கொட்டப்படும் கட்டட கழிவுகள் இந்நிலையில், சமீப காலமாக கட்டட கழிவுகளைக் கொண்டு வந்து சதுப்பு நிலத்தில் கொட்டுவது தொடர்கிறது. இது குறித்து, புகார் மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. சமீபத்தில், அப்பகுதி அருகே, கட்டப்பட்டு வரும் ஒரு கட்டடத்தின் கழிவுகள், சதுப்பு நிலத்தின் நடுவில் மலையாக குவிக்கப்பட்டுள்ளது. தவிர, தேயிலை தோட்டத்தில் 'புரூனிங்' செய்யப்பட்ட கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளது. 'இதுபோன்ற நீர் ஆதாரமுள்ள சதுப்பு நிலங்களை வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும்,' என, ஐகோர்ட் அறிவித்துள்ளது. ஆனால், நடைமுறை படுத்த அரசு நிர்வாகங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. 500 ஆண்டுகள் பழமையானது சதுப்பு நில பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ கூறுகையில்,''கேட்ச்மென்ட் ஏரியா என அழைக்கப்படும், ரைபிள் ரேஞ்ச் சதுப்பு நிலம், 500 ஆண்டுகளுக்கு மேலாக பழமையானது. இங்கு இருந்த ஏரியில் முதலையும் இருந்துள்ளது. இங்கு நீர்வாழ் பறவைகள், 6 வகையான தவளைகள், தனித்துவம் வாய்ந்த தாவரங்கள் மட்டுமே இங்கு வளரும். கோத்தகரி நகர பகுதியில் வாழும், 50 ஆயிரம் மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் இந்த சதுப்பு நிலம் சமீபக காலமாக குப்பை கொட்டும் இடமாகவும், இடிபாடு கற்களை கொட்டும் நிலமாகவும் மாறி வருகிறது. இதனை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும். கழிவுகள் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான மனு மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்ப உள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை