உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாசடைந்த குடிநீர் வினியோகம்: மக்களுக்கு நோய் அபாயம்

மாசடைந்த குடிநீர் வினியோகம்: மக்களுக்கு நோய் அபாயம்

பந்தலுார்,;பந்தலுார் அருகே மாசடைந்த குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால், மக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.பந்தலுார் பஜார் மற்றும் நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தை ஒட்டி எம்.ஜி.ஆர்., நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில், 300க் கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்ய இரண்டு -கிணறுகள் மற்றும் ஒரு திறந்த வெளி தடுப்பணை உள்ளது. கிராமத்திற்கு மத்தியில் உள்ள கிணற்றில் கழிவு நீர் கலந்து தண்ணீர் கருப்பு நிறமாக மாறி துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், ஒரு கிணறு முழுமையாக பாசிகள் படர்ந்து, கழிவுகள் நிறைந்து மாசடைந்து காணப்படுகிறது. இந்த தண்ணீரை கிராமத்திற்கு வினியோகம் செய்யும் நிலையில், மக்கள் பல்வேறு நோய்களுக்கும் உள்ளாகும் அபாயம் உள்ளது. மேலும், 'ரிச் மவுண்ட்' பகுதி கிணற்று தண்ணீர், இங்குள்ள அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளிக்கும் வினியோகம் செய்யப்படும் நிலையில் மாணவர்களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகி வருகிறது. 'கிணறுகளை துார்வாரி சுத்தம் செய்து, சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்,' என, இப்பகுதி மக்கள் கடந்த ஒரு வாரமாக, நகராட்சி அலுவலகத்தில் நேரில் சென்று வலியுறுத்தி வருகின்றனர். மக்கள் கூறுகையில், 'நகராட்சியில் நிதி இல்லை என்று கூறி, கிணறுகளை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது. இந்த பகுதியில் கோவில் திருவிழா நடைபெற உள்ள நிலையில், சமையல் மற்றும் பக்தர்கள் பயன்படுத்த வேறு பகுதியில் இருந்து குடிநீர் கொண்டுவர வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. எனவே, இப்பகுதிகளுக்கு சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், கிணறுகளை துார் வாரி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை