உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலையில் முதியோர் உதவித்தொகை பெறுவதில் தொடரும் சிக்கல்! வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்குவது அவசியம்

மலையில் முதியோர் உதவித்தொகை பெறுவதில் தொடரும் சிக்கல்! வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்குவது அவசியம்

குன்னுார்: மாநில அரசின் தடையால், நீலகிரியில் முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.மாநில அரசின் முதியோர் உதவித்தொகை மற்றும் விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்காக மாதம் தோறும் உதவித்தொகை, 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' வங்கி உட்பட சில வங்கிகளுக்கு அனுப்பப்படுகிறது. அதில், 1962ம் ஆண்டு முதல் முதியோர் உதவி தொகை திட்டம் துவக்கப்பட்டது. அப்போது, 20 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், தற்போது மாதம்,1200 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதில், 60 வயது முதல் 79 வயது வரையிலான முதியோருக்கு, மாநில அரசின், 80 சதவீதம், மத்திய அரசின், 20 சதவீதம்; 80 வயதுக்கு மேல் இருந்தால் மாநில அரசின், 60 சதவீதம், மத்திய அரசின், 40 சதவீதம் தொகை நிர்ணயித்து உதவி தொகை வழங்குகிறது.

முகவர்களுக்கு தொகை 'கட்'

இதற்காக, வங்கி சேவையில், தேர்வு செய்யப்பட்ட முகவர்கள், வாடிக்கையாளருக்கு நேரடியாக வீடுகளுக்கு சென்று இந்த தொகையை பயனாளிகளுக்கு வழங்கி வந்தனர்.இந்த தொகையை நேரடியாக சென்று வழங்குவதற்கு, கடந்த ஆண்டு நவ.,ல் மாநில அரசு தடை விதித்தது. வங்கிகளுக்கு நேரடியாக பயனாளிகள் வந்து, கை ரேகைகளை பதிவிட்டு, பெற்று கொள்ள அறிவுறுத்தப்பட்டது.இதனால், நாள்தோறும் வயதான முதியவர்கள் வங்கிகளுக்கு வந்து, நீண்ட வரிசையில் நின்று மிகவும் சிரமத்துடன் தொகையை பெற்று செல்கின்றனர். மாவட்டம் முழுவதும், 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதியோர் உதவித்தொகை பெறும் நிலையில், மாதத்தின் முதல் வாரத்தில், வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அதில், குன்னுாரில் மட்டும், 4,000 பேர் பல்வேறு உதவித்தொகைகள் பெரும் நிலையில், பலர், 90 வயதிற்கு மேல் உள்ளனர். இவர்களை தனியாக அனுப்ப முடியாமல் உடன் ஒருவரை அழைத்து வர வேண்டிய நிலை ஏற்படுகிறது.அதே நேரத்தில், நோய்வாய்பட்டவர்களுக்கு, ஆட்டோ, கார்களில் அழைத்து செல்ல வேண்டுமெனில் குறைந்தபட்சம், 200 முதல் 600 ரூபாய் வரை வாடகை கேட்பதால் அழைத்து செல்ல முடிவதில்லை.மாநிலம் முழுவதும் இந்த பாதிப்பு இருந்தாலும், மலை மாவட்டத்தில், பெரும்பாலான முதியவர்கள் உடல்நிலை பாதிப்புகளுக்கு இடையே வங்கிகளுக்கு வந்து செல்கின்றனர். இதனால், மிகவும் சோர்வடைகின்றனர்.அதே நேரத்தில் மாற்று திறனாளிகளுக்கு பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டதால், அவர்கள் மூலமாக, உதவித்தொகையை, வங்கியில் வந்து எடுத்து செல்கின்றனர்.

மாநில முதல்வருக்கு மனு

லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில்,''மாவட்டத்தில், 6 மாதங்களாக முதியோர் மற்றும் முதிர் கன்னியர்கள் வங்கிகளுக்கு சென்று மிகவும் சிரமத்துடன் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். கிராமங்களில் இருந்து, நடந்து சென்று, பஸ்களை பிடித்து நகரங்களில் உள்ள வங்கிகளுக்கு சென்று ஓய்வூதியம் பெற்று வர மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால், மலை மாவட்ட பயனாளிகளுக்கு பழைய முறைப்படி வீடுகளுக்கு சென்று ஓய்வூதியம் வழங்கும் முறையை தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி, கலெக்டர் மற்றும் தமிழக முதல்வருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.

பிரச்னைக்கு தீர்வு காண பரிந்துரை...

அரசு அதிகாரிகள் கூறுகையில்,'ஆரம்பத்தில், தபால் நிலையங்களில் மணி ஆர்டர் மூலம் வீடுகளுக்கு நேரடியாக இந்த தொகை அனுப்பப்பட்டு வந்ததால், பாதிப்பின்றி கிடைத்து வந்தது. மணியார்டர் கட்டணம், 50 ரூபாய் இருந்த நிலையில், 30 ரூபாய் என முகவர்கள் நிர்ணயம் செய்ததால், அரசு இந்த திட்டத்திற்கு மாற்றியது. சில இடங்களில் ஒரு சில முகவர்களின் தவறு காரணமாக, அரசு இதனை நிறுத்தியது. தற்போது, சில இடங்களில் மினி ஏ.டி.எம்., மூலம், முதியோர் சிலர் பணம் பெறுகின்றனர். இதே முறையில் தீர்வு காண அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை