கோத்தகிரியில் கிரிக்கெட் போட்டி; புளூ மவுண்டன் அணி வெற்றி
கோத்தகிரி; கோத்தகிரியில் நடந்த முதலமைச்சர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில், புளூ மவுண்டன் அணி வெற்றி பெற்றது.கோத்தகிரி காந்தி மைதானத்தில், முதல்வர் ஸ்டாலின் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது. இப்போட்டி தொடரில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 64 அணிகள் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.இறுதிப்போட்டி, கோத்தகிரி ராம்சந்த் புளூ மவுண்டன் கிரிக்கெட் கிளப் மற்றும் கேராடாமட்டம் அணிகளுக்கு இடையே நடந்தது. முதலில் பேட்டிங் செய்த, புளூ மவுண்டன் அணி, நிர்ணயிக்கப்பட்ட, 20 ஓவர்களில், 8 விக்கெட்களை இழந்து, 177 ரன்கள் குவித்தது. இந்த அணியை சேர்ந்த முருகன் அதிகபட்சமாக, 96 ரன்களை குவித்தார். அடுத்து விளையாடிய, கேராடாமட்டம் அணி, இலக்கை அடைய போராடியது. இருப்பினும், 126 ரன்களில், 8 விக்கெட்டுகளை இழந்து, தோல்வியை தழுவியது. இந்த அணியை சேர்ந்த தினேஷ், 35 மற்றும் சேது, 30 ரன்கள் எடுத்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு, மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது. தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலர்கள் பாபு மற்றும் வாசிம் ராஜா ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி, வீரர்களை பாராட்டினர். இதற்கான ஏற்பாடுகளை, கோத்தகிரி தி.மு.க., ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் உட்பட பலர் செய்திருந்தனர்.