கோத்தகிரி நேரு பூங்காவில் கூட்டம்; இதமான காலநிலையால் குதுாகலம்
கோத்தகிரி,; கோத்தகிரி நேரு பூங்காவில் நடந்த காய்கறி கண்காட்சியை, 15 ஆயிரம் பேர் கண்டு வியந்தனர்.நீலகிரி மாவட்டத்தில், கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக, கோத்தகிரி நேரு பூங்காவில், 13வது காய்கறி கண்காட்சி துவங்கியது. கண்காட்சியில், குழந்தைகள், பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், காய்கறிகளாலான, பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு காளை, கத்திரிக்காய், உருளை கிழங்கு, முள்ளங்கி மற்றும் கேரட் ஆகிய காய்கறிகளால் வடிவமைக்கப்பட்டு இருந்தது.மேலும், உருளை கிழங்கினாலான சிலம்பாட்டம், கேரட் மற்றும் பீட்ரூட் காய்கறிகளால் தமிழ் மறவன் பட்டாம்பூச்சி பார்வையாளர்களை கவர்ந்தது. அதில், நீலகிரி, கோவை, காஞ்சிபுரம், விழுப்புரம், ஈரோடு, தேனி, திருவண்ணாமலை மற்றும் திருப்பூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில், அரங்குகள், உள்ளூர் விவசாயிகள், தன்னார்வ அமைப்பினரின் அரங்குகள் அமைத்திருந்தனர். நேற்று முன்தினம் சிறந்த அரங்குகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில், நேற்று சிறுவர்கள் உட்பட, ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள், பூங்காவின் அழகை, இதமான காலநிலையில் கண்டுக்களித்து குதுாகலம் அடைந்தனர். பூங்காவில் இரு நாட்கள் நடந்த காய்கறி கண்காட்சியை, 15 ஆயிரம் பேர் கண்டுவியந்தனர்.ஊட்டியில், வார இறுதியில் ரோஜா கண்காட்சி துவங்கும் வரை, இந்த கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.