சேதமடைந்த பாலம் சீரமைத்தால் பலம்
கூடலுார் : 'கூடலுார் அருகே ஏழுமுறம் சாலையில் சேதமடைந்த பாலத்தை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தி உள்ளனர்.கூடலுார் அருகே ஏழுமுறம் கிராமம் அமைந்துள்ளது. கிராமத்துக்கு, கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட், மார்த்தோமா நகர் பகுதியில் இருந்து இணைப்பு சாலை செல்கிறது. இச்சாலையை கிராம மக்கள் மட்டுமின்றி, கூடலுார் நகரில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்போது குறுக்கு சாலையாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.பருவமழையின் போது, சாலையில் உள்ள பாலத்தின் ஒரு பகுதியில் தடுப்பு சேதமடைந்தது. இதனால், பாலம் பலமிழந்துள்ளது. சேதமடைந்த பகுதியில் தற்காலிகமாக மண் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டது. மேலும், 'இந்த வழியாக சிறிய வாகனங்களை தவிர, அதிக பாரமுள்ள வாகனங்களை இயக்க கூடாது,' என, அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.மக்கள் கூறுகையில், 'சேதமடைந்த பகுதியை நிரந்தரமாக சீரமைக்க வில்லை எனில், பாலம் மேலும் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, பாலத்தை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும்,' என்றனர்.