சேதமடைந்த அரசு பள்ளி சுற்றுச்சுவர் விடுமுறை நாட்களில் பாதுகாப்பில்லை
கூடலுார்; 'கூடலுார் அருகே சேதமடைந்துள்ள பொன்னுார் அரசு பள்ளி, சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தி உள்ளனர். கூடலுார் நடுகாணி அருகே உள்ள, பொன்னுாரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, ஒரே இடத்தில் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் பாதுகாப்புக்காக, பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்துள்ளனர். இதன் மூலம், பள்ளி விடுமுறை மற்றும் இரவு நேரங்களில் வெளிநபர்கள், கால்நடைகள் பள்ளி வளாகத்துக்குள் நுழைவது தடுக்கப்பட்டது. இந்நிலையில், பருவ மழையின் போது, சில இடங்களில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதன் வழியாக, இரவு நேரங்களில் வெளிநபர்கள் பள்ளி வளாகத்துக்குள் செல்லவும், விடுமுறை நாட்களில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்லும், சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சேதமடைந்த சுற்றுச் சுவரை சீரமைக்க மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி அடைந்துள்ளனர். பெற்றோர் கூறுகையில், 'பள்ளி வளாகத்தில் வெளி நபர்கள் மற்றும் கால்நடைகள் நுழைவது தடுக்க அமைக்கப்பட்டுள்ள சுற்றுச் சுவர் சேதமடைந்து உள்ளது. இதனை, சீரமைக்க நடவடிக்கை இல்லாததால், பள்ளியின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதனை தடுக்க, சேதமடைந்த பள்ளி சுற்று சுவரை சீரமைத்து வேண்டும்,'என்றனர்.