குன்னுாரில் புதிய கடைகள் கட்டுவது உறுதி; கடைகளுக்கு நோட்டீஸ் வழங்க முடிவு
குன்னுார் : குன்னுார் நகராட்சி மார்க்கெட் கடைகள் இடித்து கட்டுவதற்கு, அதிகாரிகள் உறுதி செய்துள்ளதால், வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.குன்னுார் நகராட்சி மார்க்கெட் கடைகளை இடித்து, 41.50 கோடி ரூபாயில் புதிய கடைகள் கட்ட முடிவு செய்யப்பட்டு பூமி பூஜை போடப்பட்டது. இதனை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி, கமிஷனர், நகராட்சி நிர்வாகங்களின் மண்டல இயக்குனர், மாவட்ட கலெக்டர், எம்.பி., ராஜா, அரசு கொறடா ராமச்சந்திரன் உட்பட பலரையும் வியாபாரிகள் சந்தித்து மனுக்கள் கொடுத்து, வியாபாரிகளின் வாழ்வாதார பாதிப்பு குறித்தும் தெரிவித்தனர்.சில நாட்களுக்கு முன்பு, குன்னூர் அனைத்து வணிகர்கள் நல சங்கத்தினர், ஊட்டியில் தங்கியுள்ள, மாநில முதல்வர் கவனத்தை ஈர்க்க கடையடைப்பு போராட்டம் துவக்கியபோது, பேச்சு வார்த்தை நடத்தி, அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.இந்நிலையில், அரசு கொறடா ராமச்சந்திரன் வீட்டிற்கு சென்ற, வியாபாரிகள், தங்களது நிலை குறித்து தெரிவித்து, வேறு திட்டங்களுக்கு நிதியை பயன்படுத்த வலியுறுத்தி, மறு பரிசீலனைக்கான கடிதம் தருமாறும் கேட்டனர்.'மார்க்கெட் திட்டத்திற்காக அரசிடம் இந்த நிதி பெற்று தந்துள்ளேன். திட்டம் செயல்படுத்துவது நன்மை,' என அரசு கொறடா தெரிவித்தனர்.தொடர்ந்து, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கூடுதல் கலெக்டர் சங்கீதா, டி.எஸ்.பி., ரவி, நகராட்சி கமிஷனர் இளம்பருதி, தாசில்தார் ஜவகர் முன்னிலையில், புதிய கடை திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.அதில், பார்க்கிங் வசதியுடன் நான்கு கட்டமாக கடைகள் இடித்து கட்டப்படுவது குறித்து வரைபடத்துடன் விளக்கம் அளித்தனர். மாற்று தற்காலிக கடைகள் அமைக்கும் இடங்களில் உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் எனவும் தெரிவித்தனர்.எனினும், திட்டத்தை மறுபரிசிலனை செய்வதை கோரிக்கையாக வைத்து, வியாபாரிகள், வெளியேறினர். இந்நிலையில், நகராட்சி சார்பில், மார்க்கெட் கடைகளுக்கு 'நோட்டீஸ்' வழங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதால், வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.