குன்னுாரில் அரசு கல்லுாரி அமைக்கப்படும் இடம் குறித்து கல்வி இயக்குனரக அதிகாரி ஆய்வு
குன்னுார்: குன்னுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்க இடம் ஆய்வு செய்யப்பட்டது.தமிழகத்தில், 11 இடங்களில் புதிதாக, கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் அமைக்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. அதற்கான இடங்கள் தேர்வு செய்ய கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று குன்னுாரில் கல்லுாரி கல்வி இயக்குனரக அதிகாரி காயத்ரி தலைமையில், புவியியல் துறை அதிகாரி வினோத், பொதுப்பணி துறையினர் உட்பட பலர், கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்க இடம் ஆய்வு மேற்கொண்டனர்.எடப்பள்ளியில் உள்ள இடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது, 'இந்த இடம் ஏற்கனவே கோர்ட் அமைக்க ஆய்வு செய்த நீதிபதிகள், 'நீராதார பகுதி' என, அறிவித்து திட்டத்தை கைவிட்டு சென்றனர். இதனால், இந்த இடத்தில் கல்லூரி அமைக்க வாய்ப்பில்லை,' என, தெரிவிக்கப்பட்டது. பேரட்டி கம்பிசோலையில் சாய்வான இடம் என்பதால் அந்த இடமும் கைவிடப்பட்டது.நிறைவாக, அரசு மேல்நிலை பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, தற்காலிகமாக இந்த பகுதயில் கல்லுாரி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். ஊட்டிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தரும் நிலையில், அதற்குள் இடத்தை முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.