பேரிடர் குறைப்பு தின செயல்முறை விளக்கம்
குன்னுார்:குன்னுாரில் பேரிடர் குறைப்பு தினத்தையொட்டி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குன்னுார் காந்திபுரம் பள்ளி மைதானத்தில், தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சார்பில், பேரிடர் குறைப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. நிலைய அலுவலர் குமார் தலைமை வகித்து பேசுகையில்,''நிலச்சரிவுகளால் ஏற்படும் பேரிடர்களின் போது மக்களும் உஷார் நிலையில் இருக்க வேண்டும். உடனடியாக தகவல் அளிக்க வேண்டும். வீடுகளில் காஸ் சிலிண்டர் குழாயில் ஏற்படும் தீயை எளிதாக அணைக்க, குழாய் நுனியில் உடனடியாக மூடலாம்,''என்றார். இடிபாடுகளில் சிக்கியவர்களை, கட்டர் இயந்திரத்தின் உதவியுடன் மீட்பது; காயமடைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சுமந்து வருவதன் வழிமுறைகள் குறித்து பேரிடர் மீட்பு செயல் முறை விளக்கம் அளித்தனர். மேலும் தீ விபத்துகளை தவிர்க்க காஸ் சிலிண்டரில் தீ பிடித்தால், தீயை அணைக்கும் வழிமுறைகள் குறித்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில், குன்னுார் தாசில்தார் ஜவகர் முன்னிலை வகித்தார். கிராம மக்கள் பங்கேற்றனர்.