சுற்றுலா பயணியரின் வசதிக்காக ரூ. 40 லட்சத்தில் நாய்கள் பூங்கா
ஊட்டி; ஊட்டியில் நாய்களுக்கான பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஊட்டி சர்வதேச சுற்றுலா தலமாக இருப்பதால் ஆண்டுக்கு, 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா வருபவர்களில் பல சுற்றுலா பயணியர் தாங்கள் வளர்த்து வரும் செல்ல பிராணிகளை அழைத்து வருகின்றனர். அவற்றை வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல முடியாமல், தங்கும் இடங்களில் விட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம், நாய்களுக்கு சிறப்பு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஊட்டி மரவியல் பூங்காவை ஒட்டி, வருவாய் துறைக்கு சொந்தமான இடம் கையகப்படுத்தப்பட்டு, அங்கு நாய்களுக்கான பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு வருபவர்கள் கட்டண அடிப்படையில் நாய்களை விட்டு செல்லலாம். கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ''ஊட்டியில் செல்ல பிராணியான நாய்களுக்கான பூங்கா, 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இது நாய்களுக்கு புத்துணர்வு மையமாக இருக்கும். சிறப்பாக இருக்கும் பட்சத்தில் மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் இதை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பூங்கா விரைவில் திறக்கப்படும்,'' என்றார்.