காட்டு யானை தாக்கியதில் வளர்ப்பு யானை காயம்
கூடலுார்: முதுமலையில், காட்டு யானை தாக்கியதில் காயமடைந்த வளர்ப்பு யானை சேரனுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் யானைகள் முகாம்களில், 30 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அபயாரண்யம் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு நேற்று காலை உணவு வழங்கிய பின், வனப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு பாகன்கள் அழைத்து சென்றனர். அப்போது, வளர்ப்பு யானை சேரனை, திடீரென வந்த காட்டு யானை தாக்கியது. இதனை பார்த்த பாகன்கள் சப்தமிட்டு அதனை விரட்டி, யானையை மீட்டனர். காயமடைந்த வளர்ப்பு யானைக்கு, முதுமலை துணை இயக்குனர் வித்யா முன்னிலையில், கால்நடை டாக்டர் ராஜேஷ் சிகிச்சை அளித்தார். வனத்துறையினர் கூறுகையில்,'சேரன் யானை மேய்ச்சலுக்கு செல்லும் போது, திடீரென வந்த காட்டு யானை, தாக்கியதில் காயம் ஏற்பட்டது. உடனடியாக சிகிச்சை அளித்து கண்காணித்து வருகிறோம்,' என்றனர்.