பொருட்களை வாங்கி குவிக்கும் கலாசாரம் வேண்டாம்: கல்லுாரி மாணவர்களுக்கு அட்வைஸ்
குன்னுார்: குன்னூரில் புதிதாக துவங்கப்பட்ட அரசு கலை கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்க விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் சனில் தலைமை வகித்தார். பேராசிரியர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். லஞ்சமில்லாத நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் பேசியதாவது: உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் போன்ற பொருளாதார கொள்கைகளுக்கு உலக நாடுகள் நம் நாட்டை பெரும் சந்தையாக பார்க்கின்றன. இளைய சமுதாயத்தை நுகர்வு வலையில் சிக்க வைக்க கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்கள் பிரபலப்படுத்தப்பட்டன. 'டிவி' சீரியல்கள், சினிமாக்கள் விளம்பரங்களால், மூளை சலவை செய்து பொருட்களை வாங்க ஊக்குவிக்கும் கலாசார வலையில், சிக்க வைப்பதில் வெற்றி கண்டுள்ளன. அதற்கேற்ப மேற்கத்திய கல்விமுறையும் கட்டமைக்கப்பட்டது. கை நிறைய சம்பளம், வீடு நிறைய பொருள் வாங்கி குவிக்கும் புதிய கலாசாரம் இன்று உச்சத்தில் உள்ளது. வீடுகளில நிறைய பொருட்களை வாங்கி குவிக்கும் வலையில் சிக்காமல் இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருப்பதுடன், சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மன்ற தலைவராக பீட்டர் சாமுவேல், செயலாளராக யாஸ்மின், இணை செயலாளராக மோனிஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். நிர்வாகிகள் சுப்ரமணியன், இணைச் செயலாளர் தர்மசீலன் ஆகியோர் பேசினர். மக்கள் தொடர்பு அலுவலர் லட்சுமி நாராயணன் நன்றி கூறினார்.