டிரைவர் மர்ம மரணம்; குன்னுாரில் விசாரணை
குன்னுார் ; நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே துாதுார்மட்டம் பகுதியை சேர்ந்தவர் பாலசந்திரன் என்பவரின் மனைவி பரமேஸ்வரி,39. இவரது மகன் குன்னுாரில் ஒரு பள்ளியில், 10ம் வகுப்பு பயில்வதால், வி.பி., தெரு மிஷன்ஹில் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து பரமேஸ்வரி தங்கி இருந்துள்ளார். 'எல்லநள்ளி பகுதியை சேர்ந்த டிரைவர் சுரேஷ் என்பவர், நேற்று மாலை, 3:30 மணியளவில் பரமேஸ்வரியின் வீட்டில் துாக்கில் தொங்கியுள்ளார்,' என, 108 ஆம்புலன்சுக்கு தகவல் வந்துள்ளது. அங்கு சென்று ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பார்த்த போது, அவர் உடல் கீழே கிடந்துள்ளது. பரிசோதித்த போது, இறந்துள்ளதாகவும் தெரியவந்தது.தொடர்ந்து, குன்னுார் டி.எஸ்.பி., வீரபாண்டி, இன்ஸ்பெக்டர் சக்தி தலைமையில் போலீசார் விசாரணை துவக்கினர். ஊட்டியில் இருந்து மோப்பநாய் மோகா வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனர்.அப்போது, வீட்டிலிருந்து வெளியேறிய நாய், தனியார் வணிக வளாகம் வழியாக பஸ் ஸ்டாண்ட் ஆட்டோ ஸ்டாண்ட் எதிர்புறம் வரை வந்து நின்றது. போலீசார் பரமேஸ்வரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீசார் கூறுகையில்,'சுரேசுக்கு திருமணமாகவில்லை.பரமேஸ்வரியின் வீட்டில் சுரேஷ் துாக்கில் தொங்கிய நிலையில், கயிறு அறுக்கப்பட்டுள்ளதால் கீழே விழுந்துள்ளார். விசாரணை நடந்து வருகிறது, என்றனர்.