செம்பாலா சாலை சீரமைப்பு ஓட்டுனர்கள் நிம்மதி
கூடலுார்: கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் -செம்பாலா இடையே சேதமடைந்த சாலை சீரமைப்பு பணியை நடந்து வருகிறது. கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கோழிக்கோடு சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலை உள்ளூர் மட்டுமின்றி கேரளா - கர்நாடகா மாநில போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக உள்ளது. இச்சாலையில், செம்பாலா முதல் நாடுகாணி வரையிலான, 9 கி.மீ., துாரம் சில ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது. ஆனால், செம்பாலா முதல் பழை பஸ் ஸ்டாண்ட் வரையிலான, 1.5 கி.மீ., துார சாலை சீரமைக்கவில்லை. பருவமழையின் போது சாலை பல இடங்களில் மிகவும் சேதமடைந்து மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால், இப்பகுதியை வாகன ஓட்டுனர்கள் சிரமப்பட்டு கடந்து சென்றனர். சாலையை சீரமைக்க ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வந்தனர். தொடர்ந்து, தற்போது சேதமடைந்த இச்சாலை சீரமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்றுள்ள ஓட்டுனர்கள், 'இதேபோன்று, ஏற்கனவே சீரமைக்கப்பட்ட இதே சாலையின் ஒரு பகுதியில் பல இடங்கள் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த அப்பகுதியில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.