பழங்குடியின குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு
பந்தலுார்: பந்தலுார் அருகே பாதிரிமூலா பழங்குடியினர் கிராமத்திற்கு, மின் இணைப்பு வழங்கியதால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பந்தலுார் சுற்று வட்டார பகுதி பழங்குடியின கிராமங்களில், மின்சாரம், சாலை, குடிநீர், குடியிருப்பு வசதிகள் இல்லாமல், பலரும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, பாதிரிமூலா பழங்குடியினர் கிராமத்தில் மின் வசதி இல்லாமல், பழங்குடியின மக்கள் இருளில் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகளோ, உள்ளாட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளாத நிலையில், கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரில் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் கிராமத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், மின்வசதி இல்லாத சரோஜா, சிந்து, அம்மணி, நஞ்சன், வள்ளி ஆகியோரின் வீடுகளுக்கு, மின் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும், அரசு தொகுப்பு வீடுகள் கட்டும் பணி மேற்கொண்டு வரும் நிலையில், வீடு கட்டும் பணி நிறைவு பெற்றவுடன் பிற மக்களுக்கும் மின் வசதி ஏற்படுத்தி தர முடிவு செய்யப்பட்டது. மின் இணைப்பு வழங்கிய பழங்குடியின பயனாளிகளுக்கு, மின் நுகர்வோர் அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பழங்குடியினர் நலத்துறை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, மின்வாரிய கோட்ட பொறியாளர் முத்துக்குமார், உதவி மின் பொறியாளர் கார்த்திகேசன் மற்றும் மின் பணியாளர்கள் பங்கேற்றனர். பல தலைமுறைகளாக மின் வசதி இல்லாமல் சிரமப்பட்ட மக்கள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.