உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பந்தலுார் அருகே வீட்டுக்குள் யானை; கூரை மீது ஏறி தப்பிய தொழிலாளி

பந்தலுார் அருகே வீட்டுக்குள் யானை; கூரை மீது ஏறி தப்பிய தொழிலாளி

பந்தலுார்; பந்தலுார் அருகே, இரவில் வீட்டுக்குள் காட்டு யானை புகுந்ததால், கூரையின் மீது ஏறி உயிர் தப்பிய தொழிலாளி, கீழே விழுந்து காயமடைந்தார். பந்தலுார் அருகே தட்டாம்பாறை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி,72. நேற்று முன்தினம் மாலை, 7:00 மணிக்கு பஜார் பகுதிக்கு வந்துவிட்டு, இவர் வீட்டிற்கு திரும்பி சென்ற நிலையில், வீட்டின் அருகே யானை கூட்டம் காணப்பட்டது. தகவல் அறிந்து வந்த வனச்சரகர் ரவி, வனவர் பெலிக்ஸ் தலைமையிலான வனக்குழுவினர், யானை கூட்டத்தை விரட்டி, கிருஷ்ணசாமியை வீட்டுக்குள் கொண்டு சென்று விட்டனர். இரவில் மீண்டும் அந்தப் பகுதிக்கு வந்த ஒரு யானை, இரவு, 11:00 மணிக்கு வீட்டு கதவை உடைத்து, வீட்டிற்குள் வந்து அரிசி மூட்டையை எடுத்துள்ளது. இதனை பார்த்த கிருஷ்ணசாமி, மாடம் வழியாக கூரை மீது ஏறி உயிர் தப்பினார். மீண்டும் அங்கு வந்த வனக்குழுவினர் அப்பகுதிக்கு வந்து யானையை விரட்டி உள்ளனர். அப்போது, கூரையில் இருந்து வீட்டுக்குள் கிருஷ்ணசாமி இறங்கிய போது, தடுமாறி கீழே விழுந்ததில் காயம் அடைந்தார். வனத்துறையினர் அவரை மீட்டு பந்தலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஏற்கனவே, ஒரு முறை இவர் வீட்டுக்குள் வந்த யானை அரிசி மூட்டையை துாக்கி சென்றுள்ளது. மக்கள் கூறுகையில், 'குடியிருப்புகள் நிறைந்த இந்த பகுதியில், முகாமிட்டுள்ள யானைகளை கும்கி யானைகள் உதவியுடன் அடர்த்தியான வனத்திற்குள் விரட்ட வேண்டும்,' என்றனர். வனக்குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ