வயநாட்டில் தொடரும் யானை ---மனித மோதல் ஒரே ஆண்டில் 12 பேர் பலியான பரிதாபம்
பந்தலுார், ;தமிழக எல்லையை ஒட்டிய கேரளா மாநிலம் வயநாடு பகுதியில், கடந்த ஒரே ஆண்டில், 12 பேர் யானைத் தாக்கி பலியாகி உள்ளனர். பந்தலுாரை ஒட்டி, கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் காணப்படும் புலிகள், கால்நடைகள் மற்றும் மனிதர்களை வேட்டையாடும் செயல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், தற்போது யானை- மனித மோதலும் அதிகரித்து வருகிறது. இங்கு நேற்று காலை மேப்பாடி அருகே அட்டமலை என்ற இடத்தில் பாலகிருஷ்ணன், 27, என்ற பழங்குடியின இளைஞரை யானை தாக்கி கொன்றது. வனத்துறையினர் ஆய்வு செய்து அவர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 'கடந்த ஒரே ஆண்டில் மட்டும், வயநாடு மாவட்டத்தில், 12 பேர் யானை தாக்கி உயிரிழந்துள்ள நிலையில், தொடரும் யானை -மனித மோதலை கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இதேபோல, தமிழக, கேரளா மற்றும் கர்நாடகா மாநில வனப்பகுதிகள், சந்திப்பு பகுதியான பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளிலும், யானைகள் நாள்தோறும் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது அதிகரித்து வருகிறது. இதற்கு வனப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது முக்கிய காரணமாக கருதப்படுகிறது.எல்லையில் வாழும் மக்கள் கூறுகையில், 'இந்த பிரச்னைக்கு தீர்வு காண, கேரள - தமிழக எல்லையில் உள்ள வனப்பகுதிகளில் இரு மாநில வனத்துறையினர் ஆய்வு செய்து, வறட்சி காலத்தில் வனத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதற்கான தடுப்பணைகளை அதிகரிக்க வேண்டும். 'யானைகளுக்கு விருப்பமான உணவு தாவரங்களை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.