கிணற்றில் விழுந்த யானை 21 மணி நேரத்திற்கு பின்னர் மீட்பு
பந்தலுார்,; கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் கிணற்றில் விழுந்த யானை, 21 மணி நேரத்திற்கு பின்னர் மீட்கப்பட்டது. கேரளா மாநிலம் மலப்புரம் அருகே அரிக்கோடு என்ற இடத்தில் பவுலோஸ் என்பவரின் வீட்டு தோட்டத்தில் இருந்த கிணற்றில் கடந்த, 23ஆம் தேதி யானை ஒன்று விழுந்து எழ முடியாமல் தவித்தது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பொக்லைன் உதவியுடன் கிணற்றை ஒட்டிபாதை அமைத்து யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், 'மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் யானை வந்துள்ளதால், அதனை மயக்க ஊசி செலுத்தி பிடித்து அடர்த்தியான வனத்திற்குள் விட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தால் மட்டுமே, யானையை மீட்க அனுமதிக்கப்படும்,' என, தெரிவித்து முற்றுகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வனத்துறை உயரதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 'கிணறு அமைந்துள்ள தோட்ட பகுதியில் யானையை மீட்கும் போது, விவசாயம் பாதிக்கப்படும் நிலையில் அவருக்கு, 1.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்; பொக்லைன் உதவியுடன் பாதை அமைத்து, கிணற்றில் இருந்து யானையை வெளியேற்றி அடர் வனத்திற்குள் விரட்டப்படும்,' என, உறுதியளித்தனர். அதனை ஏற்று கொண்ட பொதுமக்கள் மாலை, 6:00 மணிக்கு பொக்லைன் உதவியுடன் யானையை மீட்க ஒத்துழைத்தனர். தொடர்ந்து, நள்ளிரவு, 11:00 மணிக்கு யானை மீட்கப்பட்டு, கும்கி யானைகள் சுரேந்திரன் மற்றும் விக்ரம் உதவியுடன் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. 21 மணி நேரத்துக்கு பின் யானை மீட்கப்பட்டதால், அதன் உடல் நலம் குறித்து வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.