உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊருக்குள் வரும் யானைகள்: கண்காணிப்பில் வனத்துறை

ஊருக்குள் வரும் யானைகள்: கண்காணிப்பில் வனத்துறை

பந்தலுார்; பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், தொல்லை தரும் யானைகளை கண்காணிக்க, 30 பேர் கொண்ட வனக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில், முக்கட்டி என்ற இடத்தில் இரண்டு நாட்களாக முகாமிட்ட ஆண் யானை ஒன்று, பகல் நேரங்களில் சாலையில் உலா வருவதுடன், வாகன ஓட்டுனர்களையும் தாக்க முற்படுகிறது. இதேபோல், நெலாக்கோட்டை பகுதியில் மற்றொரு ஆண் யானை, கடந்த பல மாதங்களாக முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. ஏற்கனவே சாலையில் வந்த இரண்டு கார்களை தாக்கி சேதப்படுத்திய நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னால் பஜார் பகுதியில் நிறுத்தி இருந்த ஒரு காரையும் தாக்கி சேதப்படுத்தியது. மாலை, 4:00 மணிக்கு விளையாட்டு மைதானத்தில் புகுந்த யானை, விளையாட்டில் ஈடுபட்டவர்களையும் துரத்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அச்சமடைந்து உள்ளனர். இந்நிலையில், யானைகளை கண்காணிக்க, கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு மேற்பார்வையில், உதவி வன பாதுகாவலர் அருள்மொழி வர்மன், வனச்சரகர் ரவி, வனவர் ஜார்ஜ் பிரவீன்சன் தலைமையிலான, 30 பேர் கொண்ட வனக்குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள், 24 மணி நேரமும், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், மக்கள் குடியிருப்புகள் ஒட்டி யானைகள் வருவது தெரிந்தால் உடனடியாக, சம்பவ இடத்திற்கு சென்று யானைகளை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், ஒலிபெருக்கி மூலம் வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதியில் யானைகள் அடிக்கடி உலா வருவதால், பொதுமக்கள் தனியாக நடந்து செல்வதை தவிர்க்கவும், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வருவது தெரிந்தால், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை