நீலகிரியில் வசீகரிக்கும் மலையேற்ற வழித்தடங்கள்; ஆன்லைன் பதிவில் ஆர்வம் காட்டும் சுற்றுலா பயணிகள்
கூடலுார்: மாநில அரசின் மலையேற்ற திட்டத்தில், நீலகிரியில் தேர்வு செய்யப்பட்ட மலையேற்ற வழித்தடங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளதால், சுற்றுலா வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.தமிழகத்தில், 14 மாவட்டங்களில் 40 வழித்தடங்களை அடிப்படையாக வைத்து, மலையேற்றம் திட்டம் கடந்த, அக்., மாதம் துவங்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட மலையேற்றம் வழித்தடங்கள் தொடர்பாக டிஜிட்டல் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. நீலகிரியில், 10 வழித்தடங்கள்
நீலகிரி மாவட்டத்தில், 10 மலையேற்றம் வழித்தடங்களில், மலையேற்றம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில், கூடலுார் வனக்கோட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜீன்புல் தாவர மையம், ஊசிமலை மற்றும் கரியன்சோலை மலையேற்ற வழித்தடங்களில், நவ., 1ம் தேதி, சுற்றுலா பணிகளை மலையேற்றம் அழைத்து செல்லும் பணிகள் துவக்கப்பட்டன. இவ்வழித்தடத்தில், நம் நாடு மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலையேற்றம் சென்றுவர அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஜீன்பூல் மலையேற்றம் செல்ல முன்பதிவு செய்பவர்களை, அந்த மையத்திலிருந்து, வனப்பகுதி வழியாக பாண்டியார்- புன்னம்புழா ஆற்றின், நீர்வீழ்ச்சி வரை அழைத்து சென்று வருகின்றனர்.கரியன்சோலை, ஊசிமலை பகுதிகளுக்கு முன்பதிவு செய்பவர்களை, கூடலுார் வனச்சரக அலுவலகத்தில் இருந்து, வாகனத்தில், தேவர்சோலை உட்பிரையர் பகுதி வரை அழைத்து சென்று, அங்கிருந்து மலையேற்ற பயணம் துவக்கப்படுகிறது. கரியன் சோலை வந்தடையும் அவர்களை, வனத்துறையினர் வாகன மூலம் அழைத்து வருகின்றனர். பயணிகளை கவர்ந்த இயற்கை
நீலகிரி மலையேற்ற வழித்தடத்தில், கூடலுார் வழித்தடத்தில் மலையேற்றம் சென்று வர, சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதுவரை, ஜீன்பூல் தாவர மையத்திலுள்ள மலையேற்ற வழித்தடத்தில், 13 குழுக்கள்; ஊசிமலை மலையேற்றம் வழித்தடத்தில், மூன்று குழுக்கள் மலையேற்றம் சென்று வந்துள்ளனர்.சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'இப்பகுதியில், நிலவும் மிதமான காலநிலை, பசுமையான வனப்பகுதிகள், மலையேற்றம் சென்று வர ஆர்வத்தை துாண்டுகின்றன. இவ்வழிதடத்தில் உள்ள மலை குன்றுகள், புல்வெளிகள், தாவரங்கள், மரங்கள், பாறைகளை கடந்து செல்வது உடலுக்கும், மனதுக்கும் புதிய அனுபவத்தை தருகிறது,' என்றனர். வனத்துறையினர் கூறுகையில், 'ஆன்லைன்' முன்பதிவு செய்து, மலையேற்றம் செல்ல வரும், சுற்றுலா பயணிகளுக்கு உணவு, தண்ணீர் வழங்கப்பட்டு, வன ஊழியர்கள் பாதுகாப்புடன் அழைத்து சென்று வருகிறோம். வாரத்தில் வெள்ளி முதல் ஞாயிற்று கிழமை வரை மலையேற்ற பயணம் நடக்கிறது. இந்த திட்டத்தால் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.