நகரில் புற்றீசலாக முளைக்கும் ஆக்கிரமிப்பு: கணக்கெடுப்பு நடத்தி அகற்ற நகராட்சி கமிஷனர் உறுதி
ஊட்டி: ஊட்டி சர்வதேச சுற்றுலா தலமாக உள்ளது. ஆண்டுக்கு, 35 லட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட, பல பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சுற்றுலா பயணியர், பொதுமக்கள் நடமாட்டம் பகுதியாக உள்ள மத்திய பஸ் ஸ்டாண்ட், எட்டின்ஸ் சாலை, கமர்சியல் சாலை, புளூமவுண்டன், கார்டன்ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைப்பாதை, பார்க்கிங் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு கடைகள் அதிகளவில் முளைத்துள்ளன. இதனால், ஊட்டியின் பாரம்பரிய அழகு படிப்படியாக இழந்து வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணியர் சாலையில் நடந்து சென்று விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகமும் சில அரசியவாதிகளின் அழுத்தம் காரணமாக கண்டு காணாமல் உள்ளது. இந்நிலையில், ஊட்டி எட்டின்ஸ் சாலையோரம் சமீபத்தில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து நடைப்பாதை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு ஆங்காங்கே ஆக்கிரமித்து தேவையற்ற பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அதே பகுதியில், நடைப்பாதை இடத்தை ஆக்கிரமித்து மறைப்பு போட்டு தகரத்தால் கடை அமைக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு மக்கள் புகார் அளித்ததால், நேற்று மாலை நகராட்சி கமிஷனர் கணேசன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். அப்போது அங்கிருந்த உள்ளூர் மக்கள் கூறுகையில்,' இதேபோல, நகரில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு செல்லும் சாலையோரம், வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்பு கடைகள் வைக்கப்பட்டுஉள்ளன. அரசியல் வாதிகளின் அழுத்தம் காரணமாக அவற்றை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதனால், வார இறுதி நாட்களில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இந்த கடையை அகற்றிய அதிகாரிகள், நகரில் கணக்கெடுப்பு நடத்தி, அனுமதியில்லாத கடைகளை அகற்ற வேணடும்,' என்றனர். நகராட்சி கமிஷனர் கணேசன் கூறுகையில், '' தற்போது வந்த புகாரின் பேரில் எட்டின்ஸ் சாலையில் இருந்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. தொடர்ந்து நகரில் உள்ள சுற்றுலா மையங்கள், நடைப்பாதைகள், சாலையோரம் அனுமதி இல்லாதஆக்கிரமிப்பு கடைகள், நகராட்சி இடத்தின் ஆக்கிரமிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி, மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவுடன் விரைவில் அகற்றப்படும்,'' என்றார்.