உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  கலெக்டர் உத்தரவிட்டும் சம்பளம் வழங்கவில்லை: ஊட்டியில் போராட்டம் நடத்திய எஸ்டேட் தொழிலாளர்கள்

 கலெக்டர் உத்தரவிட்டும் சம்பளம் வழங்கவில்லை: ஊட்டியில் போராட்டம் நடத்திய எஸ்டேட் தொழிலாளர்கள்

ஊட்டி: எஸ்டேட் தொழிலாளர்களுக்கு நிலுவை சம்பளத்தை வழங்க கோரி, ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடந்தது. மஞ்சூர் அருகே தாய்சோலை மற்றும் கூடலுாரில் உள்ள நாடுகாணி தேவர்சோலை பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தனியார் தேயிலை எஸ்டேட் நிர்வாக குளறுபடி காரணமாக கடந்த சில மாதங்களாக இவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, தனியார் எஸ்டேட் நிர்வாகம் ஊதியம் வழங்க ஒப்புக்கொண்டதால் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது தேயிலை தோட்டங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு கடந்த செப்., மற்றும் அக்., மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை. கலெக்டர் முன்னிலையில், கடந்த, 3-ம் தேதி பேச்சு வார்த்தை நடந்தது. அதில், 5-ம் தேதி சம்பளம் வழங்குவதாக தனியார் எஸ்டேட் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், எஸ்டேட் நிர்வாகம் சார்பில் இது வரை தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், எஸ்டேட் தொழிலாளர்கள் நேற்று, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும், நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர். ஏ.ஐ.டி.யு.சி., தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் வினோத் கூறுகையில்,''எஸ்டேட்டில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த இரு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. கலெக்டர் அலுவலகம் முன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்க பிச்சை எடுக்கும் போராட்டத்தை தவிர்த்து, கண்டன போராட்டம் நடந்தது. விரைவில் தீர்வு காணாத பட்சத்தில் மாநில அளவில் அடுத்த கட்ட போராட்டங்களை நடத்த உள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ